Monday, June 27, 2016

பறவைகளோடு என் காதல்!

பழகி, பாசத்தால் பிணைந்த மனிதர்களைப் பிரிவது போலதான் இருக்கிறது வாழ்ந்து மகிழ்ந்த வீட்டையும், பிறந்து சுற்றித் திரிந்த ஊரையும் பிரிவது.
புது வீடு மாறி 2 வாரங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் சுவர்களுக்குள் ஒட்டவில்லை வாழ்க்கை. வீட்டை தொட்டுச் செல்லும் ரயில்கள் இன்னமும் மனசுக்குள் மகிழ்ச்சி தருகின்றன. அதே மேற்கு மாம்பலம்தான் என்றாலும், அருகில் வேறுவேறு முகங்கள், குணங்கள்.
புது இடங்களை பழகுவதைவிட, புது முகங்களை புரிந்து கொள்வதும், அவர்களோடு பழகுவதும் கடினமாக இருக்கிறது. அதனால்தான் ‘காக்கை, குருவி என் ஜாதி’ என பெரும்பாலும் நீல வானோடும், பசுமையோடும் காதல் கொள்கிறேன்.
பணிச்சூழல் காரணமாகவும், பணத் தேவைகளுக்காகவும் பிறந்த ஊரை விட்டு வேறு நகரம், வேறு நாடு செல்பவர்களுக்கு மிகவும் மனத்துணிவு வேண்டும்.
அப்படித்தான் பிறந்த மதுரையை பிரிந்து நான் சென்னை வந்ததும் இதயம் தொலைத்து இயங்கிக் கொண்டிருந்தேன். இன்னமும்கூட நீண்ட நாள் மதுரையில் இருந்து மனதை பிரிக்க இயலவில்லை.
ரயில் பயணங்களில் மதுரை நோக்கி செல்லும் நாட்கள் மனசுக்குள் குளிரடிக்கும். வைகை நதி பாலத்தை ரயில் கடக்கும்போது மீனாட்சி கோபுரம் தெரிய தொடங்கியதும் மதுரை நினைவுகள் மனசுக்குள் தட,தடவென வேகம் பிடிக்கும். நாயக்கர் புதுத்தெரு, மேலமாசிவீதி வாழ்க்கையின் ஞாபகங்கள் அலைமோதும்.
இப்போதும்கூட, கோரிப்பாளையம் விசாலம் காபியின் சுவை சென்னையில் எங்காவது தட்டுப்படாதா என கால்கள் அலைந்து திரியும்.   
மதுரையில் இருந்து கிளம்பி 1993ன் தொடக்கத்தில் கோயமுத்துார் சென்றபோது புள்ளி வைத்தது போன்ற சிறு பிரிவு மனதில் இருந்தது. கோயமுத்துார் மக்களின் ஈரம் கசிந்த இனிய நட்பும், இனிப்பான சிறுவாணி நீரும், ஜிலு,ஜிலு பாலக்காடு கணவாய் காற்றும் அந்த பிரிவு துயரை துடைத்தது. மிக,மிக குறுகிய என் நட்பு வட்டத்துக்குள் மிகுதியாய் இருப்பது கோயமுத்துார் அன்பர்களே!
ஆசை,ஆசையாய் ருசிபார்க்கும் ஒரு குழந்தையின் கையில் இருக்கும் மிட்டாயை, படீர் என பிடுங்கியதும் அது முகத்தில் தெரியும் குபீர் அதிர்ச்சிபோல இருக்கிறது பழகிய இடத்தையும், வீட்டையும் விட்டுப்போவது.
அவர்களுக்கு அது வெறும் கட்டடம். வேறு மனிதர்கள் வருவார்கள், போவார்கள், தங்குவார்கள்.
மனதால் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அது சுவாசம் என்று!
புது வீடு அருகே நிறைய காகங்கள், கொஞ்சம் குயில்கள், வாசலில் எப்போதும் 2 பசுக்கள், அதன் கன்றுகள். ரயில் பாதையை ஒட்டி இருப்பதால் எப்போதும் விசாலமான வெளிப்புறம், குபீர் என கதவை தள்ளிக்கொண்டு வரும் காற்று. பேச்சுத் துணைக்கு இருப்பதுபோல எப்போதும் ரயில்களின் ஓசை. அருகில்  இருக்கும் 7 குடும்பங்களைவிட இவைகளுடன் அதிகம் ஒட்டிக்கொண்டிருக்கிறோம்.    

No comments:

Post a Comment

Comment as என்ற இடத்தில் Anonymous என்பதைத் தெரிவு செய்து கொள்ளலாம் அல்லது gmail அக்கவுண்ட் இருந்தால் google என்ற விவரத்தைத் தெரிவு செய்து கொண்டு, உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.