Tuesday, February 26, 2013

வேறென்ன வேண்டும் என் வாழ்வில்...


பிப்ரவரி 26 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி.

நான் இன்று மாலை அலுவலகத்தில் இருந்து வந்ததும், என் மகனும், என் மகளும் கிசு, கிசு வென ரகசியம் பேசுவதும், அறைக்குள் சென்று கதவை சாத்திகொள்வதும் ஆக இருந்தார்கள்.
வழக்கமாக காலை 5 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து படிக்கும் என் மகள்.
இன்று நள்ளிரவு 12 மணிக்கு எழுவது போல் அலாரம் வைத்து இருக்கிறாள்.
கோழி கூவுவது போல அலைபேசி கதறியது.
என் மனைவி, மகள் , மகன் மூவரும் ஒருசேர எழுந்து அலமாரியில் ரகசியமாக பாதுகாத்து வைத்திருந்த அந்த பரிசு பார்சலை எடுத்து கையில் திணித்தார்கள்
... ஹாப்பி பர்த் டே டூ யு ... என்று சொல்ல
ஓ ! எனது பிறந்த நாளுக்குத்தான் இத்தனை பரவசமா?
 நான் கூட இத்தனை ஆண்டுகளில் என் பெற்றோர் பிறந்த நாளுக்கு இத்தனை ஆரவாரம் இல்லை.
என் மனதிற்குள் புதைந்து கிடந்த அன்பை இப்படி வெளிபடுத்த தெரிந்ததில்லை.

இன்று எனக்கு 46 வயது நிறைவடைந்து இருக்கிறது.
பி.காம் முடித்ததும் பணியில் சேர்ந்த ஒரே நிறுவனத்திலேயே 25 ஆண்டுகள் கடந்து விட்டன.

அந்த நாட்களை இப்போது நினைத்தாலும் நெஞ்சுக்கு கிழே இரும்பு கூண்டை யாரோ உருட்டி விட்டார் போல இருக்கும்.

நான் பார்த்த நாட்களில் என் அம்மா கழுத்தில் மஞ்சள் கயிறும், கைகளில் பிளாஸ்டிக் வளையல்களும்தான்.

சாயம் வெளுத்து, கை உருட்டி விட்ட 2 சட்டைகள் வைத்திருப்பார் அப்பா.
5 குழந்தைகள். 4 பெண். நான் ஆண்.

வயிறு காய்ந்து, கண்ணீர் வடிந்து வாயில் உப்பு கரித்து கிடந்தாலும், கடவுளையும், விதியையும் என் அம்மா திட்டி தீர்ப்பாலே தவிர, பெற்ற குழந்தைகள் மீது கோபமோ, ஆத்திரமோ காட்டியதில்லை .
விரக்தி அறியாதவள், சோர்வு தெரியாதவள்.
கண்ணில் பட்ட வீட்டு கதவுகளை எல்லாம் தட்டினாள் .
எந்த வேலை கொடுத்தாலும் தலை அசைத்தாள்...
பிள்ளைகள் பசியாற பெரும் பாடு பட்டாள்.

எந்த சுழலிலும் என் அப்பாவும் குழந்தைகளை அடித்ததில்லை
கோபவம் வந்தால் காதை பிடித்து திருகுவது போல் பாசாங்கு செய்வார்.
அதிக பட்சமாக அவ்வளவுதான்.
அம்மாவுக்கு 74ம், அப்பாவுக்கு 84ம் ஆக பெற்றோர் என்னுடனே வசிகிறார்கள்.
குழி பணியாரம், கொழுக்கட்டை, அடை, அவியல் , கூட்டாஞ்சோறு, உளுந்தகழி, மல்லி சட்னி தொடங்கி, பேர குழந்தைகளுக்காக இன்றைய friedrice வரைக்கும் அம்மா சமைத்து போடுகிறாள்.
தான் பார்த்த வேலை என்று உணர்த்ததாலோ என்னவோ, என் வீட்டில் வேலை செய்யும் அம்மாவையும் அன்பாக அம்மா உபசரிப்பாள். அவள் வாங்கும் புது புடவையே அந்த பெண்ணுக்கும் என வாங்கி தருவார்.

என் மனைவி எதற்கும் ஆசைப்படாத துறவி.
இதுவேண்டும் என்று ஒருநாளும் கேட்டதில்லை.

புன்னகை,  பொது அறிவு, புதிய சிந்தனை, பேசும் திறம் என என் குழந்தைகள் இரண்டும் நான் செய்த வரம்.

என் சகோதரிகள் குடும்பம், என் மனைவி வழி உறவினர்கள் என எல்லாரும் அளவான பேசும், அன்பான விசாரிப்புமாக வாழ்கை செல்கிறது.

இல்லாததை நினைத்து ஏங்குவதை விட, கிடைத்திருக்கும் உறவு செல்வங்களை நினைத்து சந்தோசப்படு - என்ற பக்குவ பாடத்தை வாழ்கை கற்று கொடுத்து இருக்கிறது.

அசையா சொத்துக்கள் வாங்காமல் போனால் என்ன? புன்னகை உடன் அசையும் அன்பான குடும்ப உறவுகளை இருக்கிறதே அணு அணுவாக ரசிக்க தொடங்கி  இருக்கிறேன்.


நட்பு வட்டமும், நல்ல குடும்ப உறவுகளும் எனக்கு கிடைத்து இருகிறதே ...

வேறென்ன வேண்டும் என் வாழ்வில்...

நாளைய உலகை, என் குழந்தைகள் பார்த்துகொள்ளும்...

அன்புடன் சேது