Wednesday, April 25, 2012

உத்தரவு கேட்கிறாங்க

கேள்விகளும் ஆச்சர்யங்களும்

பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட மருதமலை சுப்பிரமணிய சுவாமி வீற்றிருக்கும் சன்னிதி. மூலவர் முன் விழிகளில் நீர் திரள, மனதில் ஏதோ கோரிக்கையுடன் நிற்கிறார் அந்த பக்தர். ‘த்ரி ஸ்டார்’ ஓட்டல் கட்ட தீர்மானித்திருக்கும் கோடீஸ்வரர் அவர்.

அந்த பக்தர் கொடுத்த உதிரி செவ்வரளி பூக்களை தட்டில் வாங்கிக் கொண்டு மூலவரிடம் செல்கிறார் அர்ச்சகர். மூலவரின் இரண்டு தோள்களிலும் ஒவ்வொன்றாக பூக்களை வைக்கிறார். தட்டில் தீபம் ஏற்றிக் கொள்கிறார். 

‘ம்... இறைவன் முன்னால,  உங்க மனசில இருக்கிறத வேண்டிக்கங்க..’ - அர்ச்சகர் குரல் அதிர்கிறது. காதில் நுழைந்த மணியோசை, மூளை நரம்பெல்லாம் பரவி ஒரு மின்சார அதிர்வை உண்டாக்க, இரு கைகள் கூப்பி கண்கள் மூடி அந்த பக்தரின் உதடுகள் முணுமுணுக்கிறது.

மணியோசை அடங்கி சன்னதி அமைதியானது. அதுவரை கண்கள் மூடி நின்றிருந்த பக்தர் விழித்துக் கொள்கிறார். சிரித்த முகத்துடன் காட்சி தரும் மூலவரை விழி இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். தீபம் சுடர்விட, ஆரத்தி தட்டை சுற்றி மூலவருக்கு தீபாராதனை காட்டுகிறார் அர்ச்சகர். சில விநாடிகள் நிசப்தம்.

தீபம் காட்டிய அர்ச்சகர், வேண்டி நின்ற பக்தர், அவர் உடன் வந்தவர்கள் என எல்லாரும் முருகப்பெருமானையே பார்த்துக் கொண்டிருக்க, திடீரென மருதமலை ஆண்டவரின் வலது தோளில் வைக்கப்பட்டிருந்த செவ்வரளிப் பூ நழுவி கீழே விழுந்து முருகன் பாதத்தில் சரணடைகிறது.
‘வலது பூ விழுந்துருச்சு. நீங்க முடிவு எடுத்துரலாம். சுவாமி உத்தரவு கொடுத்துட்டார்’ என்றபடி அர்ச்சகர் பிரசாதம் கொடுக்க, பக்தர் முகத்தில் ஆயிரம் வாட் பிரகாசம்.

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டாண்டு காலமாக இந்த ‘உத்தரவு கேட்கும்’ சம்பிரதாயம் இருந்து வருகிறது. இதற்காக கோயிலில் 10 ரூபாய்க்கு சீட்டு வைத்திருக்கிறார்கள். காலை 8 மணிக்கு முன்னர் சென்றுவிட வேண்டும். உதிரி அரளிப்பூ வாங்கிச் செல்ல வேண்டும். கிருத்திகை, அஷ்டமி, நவமி நாட்களில் ‘உத்தரவு கேட்க’ அனுமதிக்க மாட்டார்கள்.

 ‘உத்தரவு கேட்டு’ வருபவர்களை மூலவர் முன் அமர வைப்பார்கள்.
சுவாமியின் வலது, இடது தோள்களில் அரளிப்பூ வைக்கிறார்கள். அதன்பின் கோரிக்கையை மனதில் நினைத்துக் கொள்ள சொல்கிறார்கள். அர்ச்சகர் ஆரத்தி காட்டி முடித்ததும் ஆண்டவன் தோளில் இருந்து பூ விழும்.  வலது பூ விழுந்தால் மனதில் நினைத்த காரியம் நடக்கும்.  இடது பூ விழுந்தால் காரியம் கைகூடாது. இரண்டும் விழாமல் இருந்தால் ‘நிறைஞ்சு இருக்கிறது’னு அர்த்தம். காரியத்தை ஒத்தி போடணும்.

‘கடந்த 18 வருஷமா மருதமலை வந்து உத்தரவு கேட்கிறேன். என்ன பொறுத்தவரை முருகன் கொடுக்கிற உத்தரவு நூறு சதவீதம் சரியா நடந்திருக்கு’ என சிலாகித்து சொல்கிறார் தொழிலதிபர் கோவை ரமேஷ்.

‘சின்ன விஷயத்தைக்கூட ‘உத்தரவு’ கேட்டு செய்ற பக்தர்கள் நிறைய பேரை  பார்க்கிறோம்’ என்கிறார் கோயில் குருக்கள் சோமு.

வரன் முடிவு செய்வது, வியாபாரம் தொடங்குவது, தொழில் அக்ரிமென்ட், இடம் வாங்குவது, புதிய வேலைக்கு போவது என மனதில் கேள்விகளோடு முருகன் உத்தரவு வேண்டி சன்னிதியில் நிற்பவர்கள் ஏராளம்.

Friday, April 20, 2012

கறுப்புக் கோட் வெள்ளை மனசு


கேள்விகளும், ஆச்சர்யங்களும்
 அந்த ரயில், புட்டபர்த்தி  நிலையத்தில் இருந்து சென்னை கிளம்பி விட்டிருந்தது.  சத்ய சாய் பாபாவின் பிரசாந்தி நிலையத்தில் சேவை செய்துவிட்டு திரும்பிய ‘சாயி பக்தர்கள்’ சிலர், அந்த ரயிலில் அமர்ந்திருந்தார்கள். அது ரிசர்வேஷன் பெட்டி. பயணிகளின் டிக்கெட்டுகளை வாங்கி பரிசோதித்துக் கொண்டிருந்தார் இளம் வயது டிக்கெட் பரிசோதகர் ஒருவர். கறுப்பு கோட் அணிந்து மிடுக்காகத் தெரிந்தார்.

சாயி பக்தர்களின் டிக்கெட்டை வாங்கி பரிசோதித்தார். அடுத்தது அவர்களுக்கு எதிரே அமர்ந்திருந்த 3 இளைஞர்கள். எல்லாரும் கல்லுõரி மாணவர்கள் போன்ற  தோற்றத்தில் இருந்தார்கள். அவர்களின் டிக்கெட்டை பெற்றுக் கொண்டார் டிக்கெட் பரிசோதகர். அந்த மூவரும் வைத்திருந்தது முன்பதிவு செய்யப்படாத (ஓபன்) டிக்கெட். அதைப் பார்த்ததும் அவர் முகம் மாறியது.
‘சாரி, நீங்கள் இங்கு அமரக்கூடாது. அன்ரிசர்வ்டு பெட்டிக்கு போங்கள் அல்லது கூடுதல் கட்டணம் செலுத்துங்கள்’ என்றார்.
அந்த 3 இளைஞர்களும் அதற்காக அலட்டிக்கொள்ளவில்லை. அடுத்து டிக்கெட் பரிசோதகரை சரிக்கட்டும் முயற்சியில் இறங்கினர்.
‘சார், ரசீது போடாதீங்க. உங்களுக்கு எவ்வளவு வேணும் வாங்கிக்கிங்க’ என்றார் ஒருவர்.
அதைக் கேட்டதும், ‘கறுப்புக்கோட்’ அணிந்திருந்த டிக்கெட் பரிசோதகர் முகத்தில் புன்னகை ததும்பியது...
‘நோ, நோ. ஐ எம் டிபரன்ட் பெர்சன். நீங்க நினைக்கும் நபர் நான் அல்ல. உரிய கட்டணம் கொடுங்க அல்லது அடுத்த ஸ்டேஷனில் இறங்கி ‘பொதுப் பெட்டி’யில ஏறிக்கங்க’ எனக் கறாராக பேசினார்.
‘ஓபன் டிக்கெட்’ பயணிகள், வேறு வழியின்றி கூடுதல் கட்டணம் செலுத்தினார்கள்.
இத்தனையும் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சாயி பக்தர்கள், ரசீது கொடுத்துவிட்டு நகர்ந்த டிக்கெட் பரிசோதகரின் கைகளை பற்றிக்கொண்டனர்.
கண்களில் ஆனந்த கண்ணீர் பொங்க, அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
‘சார், உங்க நேர்மையை பாராட்டுகிறோம். உங்கள மாதிரி நல்லவங்களால்தான் நாட்டுல மழை பெய்யறது’ என்று பரவசமடைந்தனர். அதில் ஒருவர் வெள்ளை பேப்பர் உருவி எடுத்தார். ‘கடகட’வென பாராட்டு மடல் எழுதினார். அனைவரும் கையெழுத்து இட,  நேர்மையான டிக்கெட் பரிசோதகருக்கு ஓடும் ரயிலிலேயே அந்த நொடியே பாராட்டுச் சான்று கொடு-க்க கைத்தட்டலால் அந்தப் பெட்டியே அதிர்ந்தது.
‘உரிய டிக்கெட் வாங்காம, படிச்சவங்க, அரசியல்வாதிங்க, அதிகாரம் மிக்கவங்கனு பலரும் ரயில்வேயை இப்படி ஏமாத்துறாங்க. மன நிம்மதியுடன் இந்த பணியை என்னால் தொடர முடியவில்லை. வேலையை விட்டுவிடலாமானு யோசிக்கிறேன்’ என தனது மனச்
சுமையை சாயி பக்தர்களிடம் இறக்கி வைத்தார் டிக்கெட் பரிசோதகர்.
‘பாக்கெட்டை நிரப்பும்’ நோக்கத்திலேயே பலரும் அரசு பணியில் சேரும் நிலையில், நேர்மையாக பணியாற்றி, ‘அரசுக்கு வருமானம் பார்க்கணும்’ னு  நினைக்கும் இதுபோன்ற உண்மை ஊழியர்களை பார்த்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

அன்புடன் சேது