Thursday, September 15, 2016

எங்கே போய்விடப்போகிறீர்கள் அப்பா?!

‘‘முகம் பாக்கிறவங்க, கடைசியா ஒருதரம் பாத்துக்கங்க...’’ என்று ஒலித்தது குரல்!
கண்ணம்மா பேட்டை மின் மயான மேடையில், உறங்கிக் கொண்டிருப்பதுபோலவே இருந்தது அப்பாவின் உடல்.
49 ஆண்டுகளாக எங்களோடு உறவாடிய அப்பாவை நான் பார்க்கும் கடைசி நொடி இது என்பதை உணர மறுத்தது மனம்.
மரணத்துக்குபிறகான அவரது முகத்தில் புது பூரிப்பு கவனித்தேன்.
அவரது மார்பு மீது சூடம் ஏற்றச் சொன்னார்கள்.இயந்திர கதியில் எல்லாம் நடந்தது.
குபீரென்று நெருப்பு பற்றிய நொடிகளில், அவரது உடல் இருந்த ட்ரே மெல்ல நகர்ந்தது.
நெருப்பு ஜ்வாலைகள் ஆக்ரோஷம் காட்டிய சிம்னிக்குள் அவர் பாதம் நுழைய, அதிலிருந்து என் முகத்தை திருப்பிக்கொண்டேன். வெள்ளரி பிஞ்சுபோல் மிருதுவான அந்த உடலை நெருப்பு தீண்டுவதை பார்க்கும் தைரியம் எனக்கில்லை.
‘‘காபி கொடுத்தாலே, தாத்தா சூடு தாங்க மாட்டாங்களேப்பா. அவங்கள போயி நெருப்புல வக்கிறீங்களேப்பா!. புதைக்க மாட்டாங்களாப்ப்ப்பா?’’ – என் கையை பிடித்து இழுத்து மகன் கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் நின்றிருந்தேன்.
உடல் வைத்திருந்த பாடையை வெட்டி வீசியெறிந்தார்கள்.
‘‘ஒரு மணி நேரம் வெயிட் பண்ணி. அஸ்தி வாங்கிட்டு போங்க’’ என்றார்கள்.
ஆறடி உயரம், அசத்தும் உருவமாக எங்களுடன் வாழ்ந்து மகிழ்ந்து, மறைந்தவர், சில எலும்புகளும், கொஞ்சம் கரித்துகள்களுமாக கையடக்க மண் கலசத்தில் எங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டார்.
அவ்வளவுதானா வாழ்க்கை?
கண்கள் கலங்க, கனத்த இதயத்துடன் வங்கக் கடலில் கரைத்து திரும்பினோம்.
அப்பாவின் உருவத்தை இனி எங்கும் காண முடியாது. அவரின் ஞாபகங்கள் மட்டுமே மனதில் நிற்கும்.
உணவு அருந்த, மாத்திரை விழுங்க, மூச்சுவிட, இரண்டு தினங்களாகவே அப்பா சிரமப்பட தொடங்கினார். மருத்துவரை சந்திக்க 5 மணிக்கு அப்பாயின்மென்ட். மாலை 4 மணிக்கு வீட்டிலிருந்து மருத்துவமனை கிளம்ப வேண்டும். கார் வந்தது. சேரில் அமர்ந்திருந்தவர், எழுந்து நடந்து வீட்டு வாயில்படியில் நின்றார். காலில் செருப்பு மாட்டிக் கொண்டு கிளம்ப வேண்டும். செருப்புக்குள் கால்களை நுழைத்த நொடிகளில் கண்கள் நிலை குத்தி நொடிப்பொழுதில் உயிர் பிரிந்து சரிந்தார்.
‘‘80 வயது தாண்டியவர். இது கல்யாண சாவு. கொண்டாட வேண்டும். அழக்கூடாது’’ என்றார்கள் சிலர்.
‘‘80க்கு மேல குழந்தைபோல் ஆகிவிட்டார். இனி பிறப்பு கிடையாது. முழுமையாக வாழ்ந்து மறைந்திருக்கிறார்’’ என்றார்கள் சிலர்.
‘‘நோயில் படுக்காமல், நொடியில் மரணம். நல்ல சாவு’’ என்றார்கள் சிலர்.
அப்பா அதிகம் ஆசையற்றவர். அவரின் அதிகபட்ச ஆசையே ஒரு டம்ளர் காபியும். கொஞ்சம் இனிப்பும்தான். காரம் தவிர்ப்பார்.
வெந்நீர் குளியலோ, காபி அருந்தும்போதோ சூடு தாங்க மாட்டார். பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் மனதார வாழ்த்துவார்.
‘கடவுளே கதி’ என வாழ்ந்தவர். இறைவன் அளிக்கும் ஆயுள் வரைக்கும் ‘நோயற்ற வாழ்வு’ வேண்டினார். அவர் விரும்பியதே, அவர் வாழ்வில் நடந்தது. இனி அவர் வாழ்த்தியது நடக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
வெள்ளரிப்பழம், தனது கொடியில் இருந்து விடுபடுவதுபோல, மலர்ந்த மலர்கள் செடியில் இருந்து உதிர்வதுபோல, தனது உடலில் இருந்து அவரது ஆன்மா விடுபட்டுக்கொண்டது.
இப்போது எல்லா திசைகளிலும் அப்பாவின் அசைவுகள் தெரிகிறது. அவ்வப்போது அவரின் குரல் ஒலிக்கிறது. திடீர், திடீரென அவரது நினைவுகள் வாட்டுகிறது.
எங்கே போய்விடப்போகிறீர்கள் அப்பா?!
சிறு எறும்பாகவோ, கருங் காகமாகவோ, பாட்டுக் குயிலாகவோ எங்காவது, ஏதாவது ஒரு உயிரினமாக பிறந்திருப்பீர்கள், பிறக்கப்போகிறீர்கள்.
‘இதோ அருகில் இருக்கிறீர்கள்’ என்ற உணர்வே எங்களுக்கு இன்னும் அதிக பிணைப்பை தந்திருக்கிறது.
அன்பும் அறனுமாய் வாழ்ந்த உங்கள் வாழ்க்கை நினைவுகளே எங்கள் ஆஸ்தி!