Friday, March 20, 2015

அப்ப, தாடி தாத்தா சொன்னதெல்லாம் பொய்யா? 


ஓம் ஏகதந்தாய வித்மஹே... வக்ர துண்டாய தீமஹி ...
விநாயகனை துதிக்கத் தொடங்கிய சில நொடிகளில் புயல் வேகத்தில் சுலோகம் சொல்லி முடிப்பான் அந்த பொடியன்.
அப்போதெல்லாம் அவன் வயது 7. ஆஞ்சநேயர், முருகன் என அத்தனை பக்தி சுலோகங்களும் அத்துப்படி.
‘பிரி மெச்சூர் பேபி’. எட்டு மாதத்தில் தாயின் கருவறையில் இருந்து எட்டிப்பார்த்தவன். 5 வயது வரை சரியாக பேச்சு வராது. எழுத வராது. வட்டம் போடவே கஷ்டப்படுவான். இருட்டான பகுதிக்குள் தனியே செல்ல மாட்டான். வீட்டுக்குள் இருக்கும் பாத்ரூம் செல்வதாக இருந்தாலும் துணை இருக்க வேண்டும்.
இப்போது 10ம் வகுப்பு தேர்வு எழுத இருக்கிறான். ‘நல்ல மார்க் வாங்க வேண்டும். படித்தது நினைவில் வரவேண்டும். அம்மனை வேண்டி புடவை சாற்ற வேண்டும். கோயிலுக்கு போய் வரலாம் வா’ என்று அழைத்தபோது வரவில்லை.

‘சாமின்னு ஒன்னு இல்ல... பொய் சொல்லாதீங்க. நான், வரமாட்டேன்!’ - மிக தெளிவான பதில் அளித்தான்.
கடந்த முறை திருநெல்வேலி சென்றிருந்தபோது, ஒரு கிராம கோயில் மூலவரை பார்த்து, ‘வேலிகள்ளயும் இதே கல்லு<தான் இருக்கு. இங்க சாமீன்னு கும்பிடுறீங்களே’ என்று பதற வைத்தான்.
‘நீங்கள்லாம் கம்பெல் பண்றீங்களேன்னுதான். நான் கோயிலுக்கு வர்றேன். விபூதி வைக்கிறேன்’ என்பான் பலசமயம்.
‘ஒரே சாமீ, எப்படி இத்தனை பேரையும் பார்கிறார்?....’
‘தாத்தா சின்ன வயசில இருந்து கடவுள்ட்ட வேண்டுறாங்க. எதுவும் நடக்கல...’
‘நீ, தினமும் சாமிகிட்ட வேண்டிக்கிற உனக்கும் இன்னும் ஒன்னும் கொடுக்கல...’
‘நான், சின்ன வயசில எத்தனையோ வேண்டியிருக்கேன். சாமி ஒன்னும் கொடுக்கல...அப்புறம் எப்படி சாமி இருக்குன்னு சொல்ற...?’
‘எனக்கும் சாமீ மேலயும் நம்பிக்கையில்லை, பேய் மேலயும் நம்பிக்கை இல்லை. இப்பல்லாம் இருட்டை பார்த்தா பயப்பட மாட்டேன்....நீங்கதான் எமனை கும்பிடுவீங்க. நான் பயப்பட மாட்டேன்...’
‘நீங்க, பழம், பால்னு சாமிக்கு வச்சு நிறைய வேஸ்ட் பண்றீங்க...’
- இப்படியாக தினம், தினம் கருத்து பரிமாற்றங்கள் எனக்கும், எனது 15வயது மகன் முகிலுக்கும்.
கடவுள் இல்லை. கடவுளால் எதுவும் ஆகாது என்று கறாராக வெளிப்படுகிறது அவனது கருத்து.
அம்மாவின் இடைவிடாத அறிவுறுத்தலால், பத்தாம் வகுப்பு தேர்வின்போது, மதுரை செல்லத்தம்மன் கோயிலில் உள்ள ‘அரசு - வேம்பு’ இணைந்த பிள்ளையாரை நான் சுற்றி வந்த ஞாபகம் இன்னும் நினைவில் அலைமோதுகிறது.
இப்போது, எனது மகனுக்கு கடவுள் மறுக்கும் சுதந்திரம் கிடைத்துள்ளது.
பள்ளிக்கூட நாட்களில் படித்திருக்கிறான்போல, கடைசியாக, ஒன்று சொன்னான்: ‘அப்ப, அந்த தாடித் தாத்தா சொன்னதெல்லாம் பொய்யா?’.
அதன்பின், அவனது எல்லா கேள்விகளுக்கும் என் மவுனமே பதிலாக அமைகிறது.

'' கடவுள் இருப்பதை என்னாலும் நிரூபிக்க முடியாது. கடவுள் இல்லை என்பதை என் மகனாலும் நிரூபிக்க முடியாது என்பதே நிதர்சனம்!''

Friday, March 6, 2015


பார்த்த நாள் முதல்
பார்வையால் தவம் இருக்கிறேன்!

நெருங்கி வராமல்
தொலைவில் இருந்தே
அழகு காட்டுகிறது
என் அன்பு நிலா!


பல சமயங்களில்
நெருக்கத்தைவிட
இடைவெளிகள் தான்
இனிமை தருகின்றன!

நிலா -
நீ தேய்ந்தாலும் அழகு
வளர்ந்தாலும் அழகு!