Monday, May 28, 2012

ஆஹா... பழைய சோறு!


‘மீந்து போன வடித்த சாதத்தில்  கட்டியில்லாமல் கிளறி 2 சொம்பு தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் புளிப்புச் சுவையோடு இருக்கும் பழைய சோற்றை, உப்புக்கல்லுடன் எண்ணையில் வதக்கி எடுத்த பச்சை மிளகாயுடன் ஒரு கட்டு கட்டினால் அமிர்தம்போல இருக்கும்’ என்று சிலாகித்து பேசுவார் குச்சனூரில் இருந்து சென்னையில் செட்டிலான அன்பர் ஒருவர்.

நாகரிக நெருக்கடியில் நாம் தொலைத்த பாரம்பரிய உணவுகளில் ‘பழைய சோறு’ம் ஒன்று. பாலீஷ் செய்யப்பட்ட அரிசி, குக்கர் சமையல், ரசாயன உரங்கள் தெளிக்கப்பட்ட புதுப்புது ரக அரிசி போன்றவற்றால் நகரங்களில்  பழைய சோறு சுவைப்பது அரிதாகிப் போனது.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் குடல் நோய் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் மனோகரன். தஞ்சாவூர்க்காரர். அமைதியான முகம். புன்னகை தவழ நோயாளிகளிடம் கனிவுடன் பேசுவது அவரது தனிச்சிறப்பு.
‘டாக்டர், இஞ்சி, பூண்டு, மிளகு இதெல்லாம் உணவில சேர்த்துக்கலாமா?’ என கேட்டாலே ‘அதெல்லாம் தெரியாது. நான் கொடுக்கிற மருந்தை மட்டும் சாப்பிடுங்க’ எனக் கூறும் அலோபதி மருத்துவர்கள் மத்தியில் டாக்டர் மனோகரன் வித்தியாசமானவர். எதை உண்பது, எப்படி உண்பது என்பது தொடங்கி பல பாரம்பரிய உடல்நல குறிப்புகளை நோயாளிகளுக்கு டிப்ஸ் ஆக தருவார். மருந்துகளைக்காட்டிலும் அவர் தரும் ஆரோக்கிய குறிப்புகள் அற்புதம்.
அவர் சொன்ன பழைய சோறின் ஆரோக்கிய ரகசியம் இதோ: ‘காலையில எழுந்து காபி, டீ சாப்பிடாம, ‘நீராகாரம்’ அல்லது பழைய சோறு சாப்பிட்டால் நமது உடலுக்கு நாள் முழுவதும் நல்லது. நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த பழைய சோறு உண்ணும் போது நமது குடல், நல்ல பாக்டீரியாக்களால் பாதுகாக்கப்படுகிறது. அதன்பிறகு, நாம் எது சாப்பிட்டாலும்  குடலுக்கு பாதிப்பு வருவதில்லை. பழைய சோறில் இயற்கையாகவே இருக்கும் வைட்டமின் சத்து உடலுக்கு ஆரோக்கியம் தரும்’ என்கிறார்.
கார்ன்பிளேக்ஸ், பனீர் என சாப்பிட்டு பழகிப்போன குழந்தைகளுக்கு ‘பழைய சோறு’ பழக்கப்படுத்தலாம் என குக்கர் சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்தால் மறுநாள் நொதித்துப்போய் ஒருவித நாற்றத்துடன் பழைய சோறு இருந்தது. அது ஏன்?.
‘அரிசியை பாலீஸ் செய்வதும், நெற் பயிரில் ரசாயன உரம், பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துவதால் இப்போது பழைய சோறு கெட்டுப் போகிறது. பழைய சோறு, உடலுக்கு குளிர்ச்சி தரும். இதில் உள்ள புளிப்புத்தன்மை, உணவு செரிக்க உதவும். இதில் வைட்டமின் ‘பி’ காம்ப்ளக்ஸ் உள்ளது. நம்ம கிராமத்து விவசாயி களின் ஆரோக்கிய ரகசியமே பழைய சோறு தான்’ என்று ஆச்சரிய தகவல் தருகிறார் உடுமலை இயற்கை மருத்துவர் டாக்டர். நிவேதா பாலசுப்பிரமணியம்.
‘சுவை மிகுந்த பழைய சோறு எப்படி தயாரிப்பது’ என்ற வினாவுக்கு விடை தந்தார் கோவை வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர்: ‘புதிய ரக அரிசி, உரங்களால் சோறு கெட்டுப்போவதில்லை. உணவு சமைக்கும் முறை மாறி விட்டதே காரணம். முன்பெல்லாம் பானையில் சாதம் பொங்கி, கஞ்சியை வடித்துவிடும் போது அரிசியில் உள்ள ஸ்டார்ச் வெளியேறிவிடும். இதனால் உணவு கெட்டுப்போகாது. ஆனால், இப்போது குக்கர் சமையலில்  கஞ்சி வடிக்கப்படாமல் இருப்பதால் சாதத்தில் ஸ்டார்ச் இருக்கிறது. இதனால் ஒரே நாளில் உணவு கெட்டுப்போகிறது. குக்கர் இல்லாமல் வேறு பாத்திரத்தில் சமைத்தால் சுவையான பழைய சோறு கிடைக்கும்.
வார இறுதியில், பீட்சாவுக்காக ரூ. 500 செலவு செய்யும் நம்ம குழந்தைகளுக்கு பழைய சோறு பழக்கப்படுத்துவோம். நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்
- சேது

Tuesday, May 22, 2012

நவக்கிரக சன்னிதி உணர்த்தும் அறிவியல் உண்மைகள்



‘உங்களுக்கு நெஞ்சு வலி ஏற்படும். மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்வது நல்லது...’
‘தொழிலில் நஷ்டம் ஏற்படும். கூட்டாளிகளை நம்ப வேண்டாம்...’
‘வாகனங்களில் செல்லும் போது காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு...’
- இவையெல்லாம் சமீபத்தில் ஒரு ஊடகத்தில் வெளியான ராசிபலன்.
இதேபோல, ‘சந்திராஷ்டமம்’ என காலண்டரில் குறிப்பிடும் தினங்களில் கோபம், டென்ஷன் ஏற்படும். வீண் விவாதங்களை தவிருங்கள் என்று குறிப்பிடுவார்கள்.
கிரக மாற்றங்கள் நிகழும்போது குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு ‘நெஞ்சு வலி ஏற்படும்’ என்ற ரீதியில் பலன் சொல்வது சரிதானா?. சந்திராஷ்டம பயம் தேவையா?. ஜோதிடம் அறிவியல் ரீதியிலானதா? இப்படி பல கேள்விகள் பலரிடமும்.
‘சூரியனை மையமாகக் கொண்டு பூமி உட்பட எல்லா கிரகங்களும் சுற்றிவருகின்றன என்ற வானியல் உண்மையை நமது முன்னோர் திறம்பட அறிந்து இருந்தார்கள் என்பதற்கு நமது ஆலயங்களில் காணப்படும் நவக்கிரக பிரதிஷ்டையில் சூரியன் நடு நாயகமாக அமைக்கப்பட்டுள்ளதே நிரூபணமாகும். அதுமட்டுமின்றி திருக்கணித பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்படும் நேரத்தில்தான் அறிவியல் ரீதியாக வரும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகியவை நிகழ்கின்றன. எனவே, ஜோதிடம் என்பது முழுவதும் அறிவியல் அடிப்படையிலானதே’ என்கிறார் வேத ஜோதிடத்தில் நீண்ட அனுபவம் கொண்ட கோவை ஸ்ரீ ஜெகநாத சுவாமி.
காலண்டர்களில் ‘சந்திராஷ்டமம்’ என குறிப்பிடப்படுவது ஒருவரின் பிறந்த ராசிக்கு சந்திரன் கோள்சாரத்தில் எட்டாவது ராசிக்கு வரும் இரண்டேகால் நாட்களாகும். அந்த நாட்களில் உளவியல் அடிப்படையில் ஒருவரின் மன ஆற்றல்கள் குறைந்து காணப்படும். அதேபோல, அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும் உடல் மற்றும் மன பாதிப்பு உடையவர்கள் நிலையில் மாற்றம் காணப்படும். கடல் அலைகளில் மாற்றம் ஏற்படுவதும் கண்கூடு.
ஊடகங்களில் வரும் ராசி பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் மிகப்பொதுவான பலன்களே. ஆனால், அவரவர் பிறந்த ஜாதகப்படி நடக்கும் தசாபுத்திகளின் அடிப்படையிலும், வயது அடிப்படையிலும் இந்தப் பலன்கள் மாறுபடலாம்.
உதாரணமாக, ‘ஏழரைச்சனி’ என்பது தனது முதல் சுற்றில் ஒருவிதமான பலனையும். இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றில் வேறுவிதமான பலன்களையும் தரக்கூடும். குறிப்பிட்ட ஒரே ராசியில் உள்ள எல்லாருக்கும் ‘நெஞ்சுவலி ஏற்படும்’. ‘விபத்து உண்டாகும்’ என்பதெல்லாம் நிச்சயமாக நடக்காது’ என்று தெம்பு தந்தார் ஜெகநாதசுவாமி.
‘மேலை நாடுகளில் ஒருவரின் மன நிலை அனுபவம் மற்றும் குணாதிசய அடிப்படையிலேயே ராசிபலன்கள் எழுதப்படுகின்றன.  ஆனால், நம்ம ஊர் ராசி பலன்கள் வாழ்வில் ஏற்படும் நிகழ்ச்சிகளை நேரடியாகக் குறிப்பிடுகின்றன. அவரவர் ஜென்ம ஜாதகத்தை பார்த்து மட்டுமே இதை சரியாக சொல்ல முடியும். தற்கால சமூக, அறிவியல் வளர்ச்சிகளுக்குத் தகுந்தாற்போல ஜோதிடத்துறையை மேலும் நவீனப்படுத்துவது அவசியமாக உள்ளது’ என்கிறார்கள் ஜோதிட வல்லுனர்கள்.
டென்ஷன், படபடப்பு, கோபம் கொப்பளிக்கும் சந்திராஷ்டம தினத்தின் அறிவியல் உண்மையை அறிந்து கொண்டால், நாம் அன்றைய தினத்தில் வாயை திறக்காமல், ‘மவுன விரதம்’ இருப்பதே மேல் என்ற முடிவுக்கு வந்துவிடுவோம்.
- அன்புடன் சேது

Tuesday, May 15, 2012

பாபாவுடன் பேசுகிறார்கள்!


கேள்விகளும், ஆச்சர்யங்களும்!

செல்வம் குவிய வேண்டும்... வசதிகள் பெருக வேண்டும்... நோய்கள் நெருங்கக்கூடாது... என ஆலயங்களில் ‘பிரார்த்தனை’கள் ஒருபுறம் பெருகி வருகிறது. 
மறுபுறம், அன்பான குடும்பம்... அமைதியான வாழ்க்கை... ஆதரவற்றோருக்கு உதவி... என்று சேவையில் ஈடுபட்டு மனித பிறவியை மகத்தானதாக்கிக்கொள்ளும் மனிதர்கள் இருக்கிறார்கள்.
அந்தவகையில், ஷீரடி சாயி பக்தர்கள் தனி ரகம். 
கண்களில் கனிவு, எளியோருக்கு உதவும் குணம். நாள் தவறாமல் பிறருக்காக பிரார்த்தனை என்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு சாயி பக்தர்களும் ஏதாவது ஒரு அற்புதம் உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
5 ஆண்டுகளுக்கு முன் ஷீரடியில் இருந்து பாபா காலண்டர் ஒன்று என் இல்லம் வந்தபோது, முகத்தில் சாந்தம் தவழ அதில் இருந்த பாபா பற்றி நான் எதுவும் அறிந்திருக்கவில்லை. 
ஒருசமயம், அடையாறில் உள்ள ஆனந்தி சீனிவாசன் வீட்டுக்கு சென்றிருந்தபோது, அவரது பூஜையறையில் பாபா விக்ரகம்.
‘இனிப்பு தொழிலுக்கு இடம் தேடி அலைந்து சோர்ந்திருந்தபோது, பெரிய தொழிற்சாலை அமைக்க பாபாவே இடம் அடையாளம் காட்டினார்’ என ஆச்சரியம் குறையாமல் பாபா அற்புதங்கள் பேசினார்.
ஒருமுறை, கிண்டியில் பாபா கோயிலில் நடந்த ஹோமத்தில் எழுந்த நெருப்பு ஜ்வாலையில் பாபாவின் உருவம் தோன்றியதாக பக்தர்களிடையே பரபரப்பு. மறுநாள் ஆங்கில பத்திரிகையில் வெளியான படத்தில் பாபாவின் உருவ அமைப்பை பார்த்து பலரும் பரவசம் அடைந்தனர்.
மேற்கு மாம்பலத்தில் இருக்கும் பாபா கோயிலில் வேறு அனுபவம். 
‘பாபா சிரித்தார்’ என்று ஒரு படம் வெளியானது. தோற்றம் வேறுபட்டு, அந்த படத்தில் இருந்த பாபாவின் முகத்தில் புன்னகை ததும்பியது.
கொடைக்கானலில் கைவினை ஷோரூம் நடத்தி வருகிறார் ஒரு பாபா பக்தர். தன் முகம் காட்ட மாட்டார். முகவரி தரமாட்டார். எந்த விளம்பரமும் கிடையாது. நீங்கள் பாபா பக்தர் என்று தெரிந்தால்போதும், உங்கள் முகவரி வாங்கிக்கொண்டு, பூஜை அறையில் வைத்து பூஜிக்கத்தகுந்த 3 இன்ச் அளவுள்ள பாபா வெண்கல விக்ரகம் இலவசமாக வீட்டுக்கு அனுப்பி வைப்பார்.
அவர் ஆங்கில பேராசிரியை ஞானவதி. அவரது பெண், 10ம் வகுப்பில் அதிக மார்க் வாங்கியதற்காக பாபாவுக்கு நன்றி சொல்ல கோயில் செல்கிறார். அவரிடம், ‘அம்மா, பாபா விக்ரகம் பிரதிஷ்டை செய்வதற்கு பாபாவின் நாமங்கள் நூறு முறை எழுதி தாருங்கள்’ என்று அர்ச்சகர்கள் சொல்கிறார்கள்.
‘பாபா, உன் நாமம் எழுதப்போகிறேன். எனக்கு என்ன பரிசு தருவாய்?’ என கேட்டபடி வீடு வந்து சேரும் ஞானவதிக்கு அவரது சகோதரரிடம் இருந்து விலை உயர்ந்த பேனா பரிசாக வருகிறது. 
பாபா பக்தர்களிடம் இப்படி பல சம்பவங்கள். பாபாவுடன் பேசிக் கொண்டிருப்பவர்கள்கூட உண்டு. கேட்க, கேட்க ஆச்சரியம் ததும்பும்.
தி.நகர் சரோஜினி தெருவில் பாபா தியான மையம் நடத்தி வரும் வள்ளுவன், நாளிதழ்களில் யாருக்காவது உதவி தேவை என்று விளம்பரம் வந்தால் போதும், நிதி திரட்டி அனுப்பி வைப்பார். 
மயிலாப்பூர் பாபா கோயில் விக்ரகத்தின் முகம் வருடி, பாதங்களில் முகம் புதைத்து மனம் பறிகொடுக்கும் பக்தர்கள் ஏராளம். பாபாவை பங்குதாரராக போட்டு தொழில் ஆரம்பித்து அதில் பாபாவுக்கு வரும் லாபத்தில் கோயில்களுக்கும் ஏழைகளுக்கும் செலவிடுகிறவர்களும் உண்டு.
பாபாவின் ஆலயங்களில் மின்னும் வாசகங்கள் ‘பொறுமை’, ‘நம்பிக்கை’ . இந்த இரண்டையும் பின்பற்றினாலே வாழ்வில் எல்லா நலமும், வளமும் வந்து சேரும்.
 - அன்புடன் சேது 

Sunday, May 6, 2012

ஹே... ஹே... ஹே... ஹேய்ய்ய்!




அது ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரம். ஆண்டு தேர்வின் இறுதி நாள். அன்றோடு பரீட்சை முடிந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஆரம்பமாகிறது. சென்னையில் உள்ள அந்த மெட்ரிக் பள்ளியில் நிசப்தம். ஒவ்வொரு வகுப்பறையாக சென்று மாணவர்களின் புத்தக பைகளை சோதனையிட்டனர் ஆசிரியர்கள். பட்டாசு, ராக்கெட், தீப்பெட்டி, கலர் பொடி, மை பாட்டில் இத்யாதிகளை அள்ளி எடுத்தனர். மாணவர்கள் முகத்தில் சோகம். போரில் வென்று நாடு திரும்பும் மாமன்னன் போல ஆசிரியர்கள் முகத்தில் களிப்பு.

கடிகாரம் 12.30 ஐ தொட, மணி ஒலித்தது. ‘ஹோ’வென்ற கூச்சல் எழ, வகுப்பறையில் இருந்து விடுபட்டு, படிகளில் தாவி, குதித்து, மைதானத்தில் புழுதி கிளப்பி, ஆடைகளில் செம்மண் அப்பிக்கொள்ள முகத்தில் மகிழ்ச்சி கொள்ளாமல் மாணவர்கள் வீதிக்கு வந்தார்கள்.
அடுத்த சில நொடிகளில், ஆண்டு முழுவதும் படித்து முடித்த புத்தகங்கள் காற்றில் பறந்தன.
‘பட,பட’ வென பட்டாசு சத்தம் ... ‘விர்’ என்று பறந்தன ராக்கெட்டுகள்... பையில் எடுத்துச் சென்றால் பிடிபடுவோம் என்று உணர்ந்த கில்லாடி மாணவர்கள் சிலர் மைதானத்தில்
செடிகள் இடையே மறைத்து வைத்துச் சென்றுள் ளனர்.
கலர் பொடிகள் முகத்தில் ரங்கோலி வரைய, பேனாவில் நிறைக்கப்பட்ட ஊதா மை, யூனிபார்மில் வண்ண சாரல் அடித்தது. ஆசை தீர ஆடி குதித்து மகிழ, உடற்கல்வி ஆசிரியரின் ஏழெட்டு ‘எச்சரிக்கை’ விசிலுக்குப்பிறகு தத்தம் இல்லம் நோக்கி புறப்பட்டனர்.
சென்னை பெருநகரில் படிக்கும் இதுபோன்ற பள்ளி குழந்தைகளுக்கு ஏன் ஆண்டு இறுதியில் மட்டும் இத்தனை சந்தோஷம்?.
காலில் செருப்புக்கூட இல்லாமல், தினமும் 2, 3 கி.மீ. தொலைவு நடந்து சென்று படிக்கும் கிராமப்பகுதி குழந்தைகளின் முகங்களில் எப்போதும்  இருக்கும் பிரகாசம் ஏன் நகர்ப்புற குழந்தைகளிடம் மிஸ்ஸிங்?.
எல்லாக் குழந்தைகளுக்கும் ‘பர்ஸ்ட்’ மார்க் பிரஷர். முதுகில் புத்தக சுமை. அதிகாலை எழுந்து அரக்கபரக்க பள்ளி கிளம்புவது.  அரைகுறை ‘பிரேக் பாஸ்ட்’. மாலை வரை பள்ளியில் பாடம். விளையாட்டு நேரத்தில்கூட மைதானத்தில் ஓட  அனுமதிக்காத விளையாட்டு ஆசிரியர். வீடு திரும்பியதும் மறுபடியும் படி, படி, படி.
பெரும்பாலான கல்விச்சாலைகள், ‘சிறைச்சாலைகள்’  போல மாணவர்களை நடத்துவதால், ஆண்டு தேர்வு முடியும் நாளை  ‘விடுதலை’ நாள் போல மாணவர்கள் கொண்டாடுகிறார்கள்.
கிராமப்புற குழந்தைகளுக்கு இந்த நெருக்கடி இல்லை. சுதந்திரம் அனுபவிக்கிறார்கள். வயல்களை கடக்கிறார்கள். ரயில்களை ரசிக்கிறார்கள். மரங்களில் இளைப்பாறுகிறார்கள். குளம், குட்டை, பம்ப்செட் என நீரில் விளையாடுகிறார்கள். பறவைகளை துரத்துகிறார்கள். இடையில் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் மரத்தடி நிழலிலும், காற்றோட்டமான அறையிலுமாக கல்வி பயில்கிறார்கள்.
சென்னையில் படிக்கும் குழந்தைகளுக்கு வெகு சில ஆறுதலான பள்ளிகளும் இருக்கத்தான் செய்கின்றன. அப்படி ஒரு பள்ளியை நடத்துகிறார் முன்னாள் டிஜிபி ராஜ்மோகன்.
சென்னையில் இருந்து மகாபலிபுரம் செல்லும் சாலையில் கேளம்பாக்கம் அருகே ஐ.டி. நிறுவனங்கள் சூழ்ந்த பகுதியில் இவர் நடத்தும் பள்ளியில், மீனவ குப்பத்து குழந்தைகளும் படிக்கின்றனர்.
‘பள்ளி வளாகத்தில் ஒரு 10, 15 மாமரங்கள் வளர்க்கணும். மாங்காய்கள் காய்த்து தொங்கும்போது, ஒவ்வொரு வகுப்பா அனுப்பி, பசங்களை கல்லெடுத்து மாங்கா அடிக்க வச்சு, ஆசை, ஆசையா சாப்பிட வைக்கணும். அதான் சார் என் ஆசை’ என்கிறார் முகத்தில் பிரகாசம் மின்ன.  
நகரங்கள் சிட்டுக்குருவிகளை தொலைத்து நிற்பது  போல, ‘மெட்ரோ’ குழந்தைகள் இழந்த சந்தோஷங்களை மீட்டுத்தர இவர் போல பலர் இன்னும் தேவை சென்னைக்கு!.

அன்புடன் சேது

Thursday, May 3, 2012

தெய்வமே! எனக்கு இரண்டு சிறகுகள் தர மாட்டாயா?



தெய்வமே! எனக்கு இரண்டு சிறகுகள் தர மாட்டாயா?

‘தெய்வமே! எனக்கு இரண்டு சிறகுகள் தர மாட்டாயா?. பாழ்பட்ட மனிதர் கூட்டத்தையும், அதன் கட்டுகளையும், நோய்களையும், துன்பங்களையும், பொய்களையும் உதறி எறிந்துவிட்டு, நான் இஷ்டப்படி வானத்திலே பறந்து செல்ல மாட்டேனா? ஆகா! எத்தனை தேசங்கள் பார்க்கலாம்! எத்தனை பூக்கள், எத்தனை மலைகள், எத்தனை அருவிகள், எத்தனை நதிகள், எத்தனை கடல்வெளிகள்!...’
- மகாகவி பாரதியின் மனதில் பொதிந்திருந்த ஆசைகள் இவை.
சுதந்திரமாய், வீட்டுக்குள் பறந்து வரும் சிட்டுகுருவிகளுக்கு அரிசி மணிகள் வழங்கி, அவை கொத்தி தின்னும் அழகை ரசிப்பதுதான் பாரதியின் முக்கிய பொழுதுபோக்கு.
சிறு நகரங்களில்கூட குருவிகள் பறப்பதை நாம் ரசித்திருப்போம்.  வீடுகளின் கூரைகளிலும், வீட்டின் முற்றத்திலும் சிதறிக்கிடக்கும் தானியங்களை அவை உண்ணும் அழகை கண்டு களித்திருப்போம். ‘கீச்’, ‘கீச்’ என செல்லமாய் குரலெழுப்பி, ‘துறு, துறு’வென இரை தேடும் சிட்டுகுருவிகளின் தரிசனம் பார்த்து நகரங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது.
வசீகர அழகு காட்டும் சிட்டுக்குருவிகள் எங்கே போயின? என்ற ஆராய்ச்சியில் பறவையின ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வெளியிடும் கருத்து:
* சிட்டுக்குருவிகள் ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்யும் இயல்புடையவை. இதனால் அவற்றுக்கு ‘ஆண்மை விருத்தி  சக்தி’ உண்டு என்று சில ‘வைத்தியர்கள்’ கருத, ‘சிட்டுக்குருவி லேகிய’த்துக்காக உயிர்த் தியாகம் செய்துள்ள குருவிகள் ஏராளம்.
* விசாலமான முற்றத்துடன் ஓடுகள், கம்புகள் வேய்ந்து கட்டப்பட்ட நமது பாரம்பரிய வீடுகள் சிட்டுக்குருவிகள் கூடு கட்ட உகந்ததாக இருந்தன. அபார்ட்மென்ட்டுகளாக நமது வீடுகளின் அமைப்புகள் மாறிவிட்டதால் குருவிகள் சிறகடிக்க வசதியில்லை.
* அலைபேசி கோபுரங்கள் விடும் கதிர்வீச்சு குருவி போன்ற மெல்லிய பறவையினங்களை பாதிக்கின்றன.
* தானியங்களில் தெளிக்கப்படும் பூச்சி கொல்லிகள்கூட குருவிகள் அழிவுக்கு காரணமாகின்றன என பட்டியலிடுகிறார்கள். முற்றங்கள் தொலைந்து பால்கனிகளாக மாறிப்போன நமது அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சிட்டுக்குருவிகளை அழைத்துவரப்போவது யாரோ?.
பாரதி இப்படிச் சொல்கிறார்: என் வீட்டிலே இரண்டு உயிர்கள் வாழ்கின்றன. அவற்றில் ஒன்று ஆண். மற்றொன்று பெண். இவை தம்முள்ளே பேசிக் கொள்கின்றன. குடும்பத்துக்கு வேண்டிய உணவு தேடிக் கொள்கின்றன. கூடு கட்டிக்கொண்டு, கொஞ்சிக் குலாவி மிக இன்பத்துடன் வாழ்ந்து, முட்டையிட்டுக் குஞ்சுகளைப் பசியில்லாமல் காப்பாற்றுகின்றன.
சிறிய தானியம் போன்ற மூக்கு; சின்னக் கண்கள்; சின்னத் தலை; வெள்ளைக் கழுத்து; அழகிய  வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு; சாம்பல் நிற முதுகு; சிறிய தோகை; துளித்துளிக் கால்கள். இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்து விடலாம். சிட்டுக்குருவி பறப்பதைப் பார்த்து எனக்கு பொறாமை உண்டாகும். இந்தக் குருவிக்கு எப்போதேனும் தலை வலி வருவதுண்டோ? மனிதரின் நெஞ்சைச் செல்லரிப்பதுபோலே அரிக்கும் கவலையும், அதனால் ஏற்படும் நோயும் குருவிக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
இப்போது சொல்லுங்கள், நாம் எவ்வளவு ‘மிஸ்’ பண்ணியிருக்கோம்?.
- சேது