Monday, June 18, 2012

அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியம்!

‘நம்ம லலிதாம்பிகை அம்மன் கோவில்ல 100 சிட்டுக்குருவிகள் இருக்குங்க. அதிகாலை பொழுதுகளில் அவை செய்யும் ‘கீச்சுக்குரல் சங்கீதம்’ கேட்டால் வாழ்நாள் துயரமெல்லாம் பறந்தே போய்விடும். ஆனா, அதை எங்களோடு சேர்ந்து அனுபவிக்கத்தான் யாராவது வேண்டும். வாங்க... வாங்க...’
 - கோவையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அனுவாவி மலையடி வாரத்தில் அமைந்துள்ள  லலிதாம்பிகை கோயில் ஸ்தாபகர் ஸ்ரீ ஜெகநாத சுவாமி அனுப்பிய மெயில் இது. தொலைந்து வரும் சிட்டுக்குருவி இனங்கள் குறித்து வாரமலரில் வந்த செய்திக்கு அவர் தந்த பதில். அதை படித்ததும் பரவசம்.
ஆட்டோக்களில் அடைபட்டு பயணிக்கும் நகர குழந்தைகளைவிட, வயல் வரப்புகளை கடந்து செல்லும் கிராமத்து செல்லங்கள் தன்னம்பிக்கையுடன், தைரியமாக வளர்கின்றன. திரும்பிய திசையெல்லாம் பரந்து விரிந்து கிடக்கும் இயற்கைதான் அவர்களுக்கு தெம்பு தருகிறது போலும்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை கான்கிரீட் கட்டடங்களும், சாலைகளில் ‘தலைதெறிக்க ஓடும்’ வாகனங்களையும் பார்த்து அலுத்துப்போனது சென்னை வாழ்க்கை. 
‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா?. அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியம்’ எனப் பாடி பரவசமடைந்த பாரதிமீது பொறாமைதான் வருகிறது.
பறவைகள், நதி, வானம், மரங்கள், மலர்கள் என எதை பார்த்தாலும் பாரதியின் மனசுக்குள் மத்தாப்புதான். பாரதி அளவுக்கு பரவசம் எட்டாவிட்டாலும், சென்னை போன்ற நகர வாழ்க்கையில்  சின்னச்சின்ன சந்தோஷங்கள் மனசுக்குள் எட்டிப்பார்த்து அவ்வப்போது பரவசப்படுத்துவதுண்டு.
அக்னி நட்சத்திர காலத்தில் வழியில் துளியும் நிழல் இல்லாமல், அனல் காற்று முகத்தில் அடிக்க பயணம் செய்யும் போது சாலைகளில் நடுநடுவே எங்காவது தட்டுப்படும் மரநிழல் மனசுக்குள் ‘ஜில்’லடிக்கும்... 

அலுவலகத்துக்கு அவசரமாய் கிளம்பிச் செல்லும்போது, வழியெங்கும் ‘பச்சை சிக்னல்’ ஒளிர்ந்து இடையில் நிற்காமல் வாகனத்தில் பறப்பதில் சின்ன சந்தோஷம்... 

நெற்றி சுருங்க, தலை கனக்க சோர்வான மாலை பொழுதுகளில் ஒரு கப் காபி சாப்பிட்டு மனசை மலரச் செய்யலாம் என ஓட்டலில் காபி ஆர்டர் செய்வோம். சரியான சூடு, நாசி துளைக்கும் நறுமணம், நாக்கின் சுவை அரும்புகள் வழியே மூளைக்குள் மின்சார பாய்ச்சலாய் செல்லும் அசத்தல் சுவையில் காபி கிடைத்தால் அது வரம். அன்று நாள் முழுதும் அதே ஞாபகம்...

அரசு பஸ்சிலோ, மின்சார ரயிலிலோ பக்கத்து இருக்கையில் ‘குண்டு’ ஆசாமி அமராமல் இருந்தால் எட்டிப்பார்க்கும் துளி சந்தோஷம்... 

அரைத்து எடுத்த பருப்பு, மிளகாய் கலவை. இடையிடையே தேங்காய் பல் எட்டிப்பார்க்க, சுற்றிலும் எண்ணை பட, இளம் சூட்டில் வேகவைத்து, பொன்னிறத்தில் ஆவி பறக்க அம்மா வார்த்து கொடுக்கும் அடையை செல்போன், டிவி ‘ஆப்’ செய்து விட்டு, நாவில் சூடுபட சாப்பிடுவதில் அலாதி ஆனந்தம்...

வீட்டு பால்கனியில் எப்போதாவது வந்து அமர்ந்து தலை சாய்த்து ‘கரையும்’ காகம்... 

எச்சில் தொட்டு கிழித்து கொடுக்கும் பஸ் டிக்கட்டுக்குப்பின்னர் சரியான சில்லறை திருப்பித்தரும் கண்டக்டர்...
காபி பொடி கடையிலேயோ, ரேஷனிலோ நாம் பார்க்கிறோமா என நொடியில் கவனித்ததும் சரியான அளவில் எடை கட்டும் சிப்பந்திகள்... 

பான்பராக் கறை படியாத அபார்ட்மென்ட் மாடிப்படிகள்... 

மொட்டை மாடியில் காகம், அணில்களுக்கு உணவு படைப்பவர்கள், பறவைகளுக்குத் தண்ணீர் குவளை வைப்பவர்கள்... என சின்னசின்ன சந்தோஷங்கள் மனதை நிறைத்து வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்துகிறது. 

நினைவுகளை அசைபோட்டு நீங்களும் பட்டியல் போட்டு பாருங்களேன்.
அன்புடன் சேது  

Monday, June 4, 2012

வெளிக்காற்று உள்ளே வரட்டும்!


பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சிலர் இன்ஜினியரிங் கல்வி புரியாமல் செமஸ்டர்களில் தோல்வி அடைந்து தற்கொலை தழுவினார்கள்...

ஒரு பெரிய பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு முடித்த இன்ஜினியரிங் மாணவர்களில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களே வளாக தேர்வில் தோல்வி அடைந்தார்கள்... இப்படி செய்திகள் வெளியாகின்றன. உயர்கல்வி மாணவர்களிடம் ஏன் இந்த தடுமாற்றம்?.
பள்ளி பருவத்திலேயே நமது மாணவர்களிடம் தலைமைப் பண்பு, படைப்புத்திறன், சமூக நோக்கம், எதையும் சந்திக்கும் ஆற்றல், தன் முனைப்பு போன்ற பிற திறன்களும் வளர்க்கப்பட வேண்டும். ஆனால், இன்று ‘மார்க் மிஷினாக’ மட்டுமே மாணவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.
‘புத்தக மூட்டை’ சுமக்கும் மாணவர்களின் மன இறுக்கத்தை குறைக்க,  ‘வெளிக்காற்றை திறந்துவிடும்’ பள்ளிகள் இருக்கத்தான் செய்கின்றன. திருச்சி சமயபுரம் அருகே உள்ள ஒரு பள்ளி நிர்வாகம், மதிப்பெண்கள் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல், பள்ளி பருவத்திலேயே மாணவர்களின் கனவு சாலைகளை திறந்துவிடும் மகத்தான பணியை செய்கிறது.
‘கனவு மெய்ப்பட’ என்ற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் நடக்கும் அந்த நிகழ்ச்சியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், ஓவியர்கள், எழுத்தாளர்கள், தலைவர்கள், சாதனையாளர்கள் என பல ‘அடையாள’ மனிதர்கள் அழைத்து வரப்பட்டு பேச, மாணவர்களிடம் அளவளாவ வைக்கப்படுகிறார்கள். அந்தவகையில், இறையன்பு,  சைலேந்திரபாபு, ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் போன்றோர் பங்கேற்று இருக்கிறார்கள். மாணவர்கள் மனதில் புதிய சிந்தனையை விதைக்க இந்த முயற்சிகள் கை கொடுக்கிறதாம்.
5ம் வகுப்பில் இருந்தே ஐஐடிக்கு பிள்ளைகளை தயார்படுத்தும் பெற்றோர்களின் போட்டி நிறைந்த சூழலில்,‘பேப்பரை எடு, பிரஸ் பிடி, வண்ணம் தீட்டு’ என சொல்வதெல்லாம் எடுபடுமா?’
‘இயல்பாகவே ஓவியம் வரைவதில் ஆர்வம் இருக்கும் ஒரு மாணவர், பிற்காலத்தில் அவர் படிக்கும், பணியாற்றும் துறையில் சிறப்பாக பிரகாசிக்க முடியும்’ என்று சஸ்பென்ஸ் தருகிறார் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது.
ஒரு கல்லூரி மாணவரின் இளமைத்துடிப்போடு பரவசமாய் இருக்கிறார்  மருது. 10, 15 ஆண்டுகளுக்கு முன்பே கணினி உதவியுடன் வண்ணம் தீட்டியவர். அனிமேஷன், டிஜிட்டல் ஓவியம், திரைப்பட கலை இயக்குனர் என பல்துறை வித்தகராக பிரகாசிக்கும் மருது சொல்லும் சூத்திரம் இது:
‘தான் நினைக்கும் கருத்தை, சுதந்திரமாக, விரும்பிய வண்ணத்தில் ஒரு வெள்ளை காகிதத்தில் ஓவியமாக தீட்ட பழகும் ஒரு மாணவனுக்கு, ஓவிய பயிற்சி மட்டும் கிடைக்கவில்லை. தான் நினைப்பதை, இடையில் யாருடைய தலையீடும் இல்லாமல் தானே வெளிப்படுத்தும் (கம்யூனிகேஷன் ஸ்கில்) திறனையும் சேர்த்தே பெறுகிறான்.
கருத்தும், கற்பனையும் கலந்து தான் நினைப்பதை ஓவியமாக தீட்டும் ஒரு மாணவர், பிற்காலத்தில் ஓவியராகத்தான் வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர் இளவயதில் எடுத்துக்கொள்ளும் இந்த பயிற்சி, அவர் எதிர்காலத்தில் எந்த துறையிலும், எந்த செயலிலும் துணிச்சலுடன் மற்றவர்களிடம் தன் கருத்தை பகிர்ந்து கொள்ள முடியும். மேலும், ஓவியம் பயிலும் மாணவனுக்கு எதையும் கூர்ந்து நோக்கும் பழக்கமும் வந்துவிடுகிறது. அது கல்வியில் சிறந்த ஆற்றல் பெற்று தருகிறது. இத்தனை சிறப்புமிக்க ஓவிய பயிற்சிகளை தங்கள் பிள்ளைகளுக்கு வழங்க முயற்சி எடுக்கும் பெற்றோரும், பள்ளி நிர்வாகங்களும் பாராட்டுக்குரியவர்கள்’ என்று பரவசமாகிறார் மருது.
- சேது