Saturday, December 26, 2015

தேடி வந்த தெய்வங்கள்...
நீண்ட மவுனம்... நெடிய அமைதி... வெள்ளத்தில் துவண்ட சென்னையின் ஈர நாட்களுக்குப்பிறகு
இப்படித்தான் இருந்தது என் மனது.
எதையும் எழுத வேண்டாம் என்று இறுக்கமாக இருந்த என் மவுனத்தை கலைத்தார் 70 வயது
ஆண்டாளம்மாள்.
தினமும் 30, 40 வீடுகளின் மாடி, ஏறி இறங்கி ஆவின் பால் பாக்கெட்டுகளை அதிகாலை 4 மணி
முதலே வினியோகிப்பார். வெள்ளம் உலுக்கிப்போட்ட, பால் வினியோகிக்கப்படாத
2 தினங்கள் மட்டும் அவரை பார்க்க முடியவில்லை.
அதன்பிறகு வெள்ளத்திலும் தத்தளித்து சரியான நேரத்தில் பால் பாக்கெட் போட்டுவிட்டுச்
சென்றிருந்தார்.
தரைத்தளம், முதல்தளம் என வீடுகளுக்குள் புகுந்து வேட்டையாடிய வெள்ளத்தால்
ஒவ்வொரு இல்லமும் சகதிக்காடாயின. ஆசை, ஆசையாய் பயன்படுத்திய கட்டில், மெத்தை,
தலையணை, வாஷிங்மிஷின், டிவி, பிரிட்ஜ், துணிமணிகள், வாகனங்கள் என
எல்லாமும் ஒரே இரவில் குப்பைக்கு வந்து மலை, மலையாய் குவிந்தன.
உயர் தட்டு மக்களும், நடுத்தர குடும்பங்களும், குடிசைவாசிகளும் ஒரே இரவில் ஒரே வாழ்க்கை
சூழலுக்குள் தள்ளப்பட்டார்கள். வீட்டுக்குவீடு பல லட்சம் மதிப்புக்கு பொருட்கள் நஷ்டம்.
படுக்க, உடுக்க, புசிக்க என எல்லாவற்றையும் முதலில் இருந்து மீண்டும் தொடங்க வேண்டும்.
பலரது முகத்திலும் பீதி குறையவில்லை. சோகம் அகலவில்லை.
இல்லத்தை வெள்ளம் துடைத்து போட்டுபோன வலி அறியாத குழந்தைகள் பலரும்
துயரத்தின் மிச்சமாய் தேங்கி கிடந்த மழை நீரில் கால் நனைத்து மகிழ்ந்தன.
2 நாட்களாய் வீடுபோய்ச் சேர முடியாமல் சாலையில் அழுது தவித்த ஒரு பெண்ணை
தன் இல்லத்தில் தங்க வைத்திருந்தார் என் இல்லத்துக்கு அருகில் இருந்த திரைப்பட
இயக்குனர் குமார்.
அம்மாவும், மனைவியும் வெளியூர் சென்றுவிட்டு சென்னை திரும்ப முடியாமல் தவித்த
5 தினங்களிலும் எங்கள் குடும்ப சூழல் அறிந்து வேளை தவறாமல்
சுடச்சுட உணவு சமைத்து எனக்கும், என் குழந்தைகள், எனது அப்பாவுக்கும்
பரிமாறி பாசத்தில் நெகிழ வைத்தது என் இல்லத்துக்கு எதிரே வசிக்கும்
பேராசிரியர் அப்துல்நாசர் அவர்களின் குடும்பம்.
என் இல்லத்தில் 4 பேருக்கு இடம் இருக்கிறது. வந்து தங்கிக் கொள்ளலாம் என்ற வாட்ஸ்அப்
தகவல்களும், முகநூல் அழைப்புகளும் ஜனங்கள் முகத்தில் பிரகாசத்தை பிரதிபலித்தது.
வீடு பூராவும்சாக்கடை தண்ணீர் புகுந்துருச்சு. கொஞ்சம் டெட்டால் இருக்குமா என கேட்ட பணிபுரியும் பெண்ணுக்கு 2 பாட்டில் டெட்டால் வாங்கி கொடுத்து, புதுப்பாய், தலையணை,
பெட்ஷீட் வாங்கிக்கோங்க என பணமும் தந்து உதவி நிவாரணம் தந்த குடும்பத்தையும் பார்க்க முடிந்தது.
அரை லிட்டர் பாலை 50 ரூபாய்க்கு விற்றவர்களையும், 30 ரூபாய் வாட்டர் கேனுக்கு நூறு
ரூபாய் வாங்கியவர்களையும் இதே வெள்ளம்தான் அடையாளம் காட்டியது.
எந்த அலைபேசி அழைப்புகளும், அரசாங்க ஆணைகளும், விளம்பர மோகமும் எதிர்பார்க்காமல்
இளகிய மனம் கொண்ட இளைஞர்கள், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கவும், மீட்கப்பட்டவர்களுக்கு
உதவவும் தெருவெங்கும் திரண்டார்கள்.
இத்தனை நாள் ஆலயங்களில் தேடிப்போய் கும்பிட்ட தெய்வங்கள் எல்லாம், மனித உருவில்,
தெருவில் இறங்கி மக்களைத் தேடித்தேடிச் சென்று உதவியதுபோல இருந்தது.
ஆள்பவர்கள் செய்த தவறா? ஆண்டவன் செய்த தவறோ என யாருக்கும் நினைத்துப்பார்த்து
நியாயம் கேட்க நேரமில்லை.
‘அடுத்தது என்ன செய்யப்போகிறாய்? கமான்...’ என்று சென்னை வாழ்க்கை எல்லாரையும்
மீண்டும் சுறுசுறுப்பாக்கியது.
சில தினங்களுக்குப்பின் பால் பாக்கெட் போடும் பாட்டியை பார்த்தேன்.
‘என்ன பாட்டி எப்படி இருக்கீங்க?...’
‘நல்லா இருக்கேன் சாமீ. வெள்ளந்தான் வீட்ல உள்ளத எல்லாம் அள்ளிட்டு போயிருச்சு.
ஆண்டவன் எடுத்துக்கிட்டான். அம்புட்டுத்தான் என்ன செய்யமுடியும்...’
- பொக்கை வாயில் இருந்து கலகலப்பாக சிரிப்பு.
‘உனக்கு என்ன வேணும் சொல்லு வாங்கித்தாரேன்...’
‘எல்லா பொருளும் மீண்டும் கிடைச்சிருச்சுங்கங்ய்யா.. போதும்’ என்றபடி போய்க் கொண்டிருந்தார்.
பலரையும் மிரட்டி சென்றிருந்த சென்னை பேரிடர், அந்த பெண்ணிடம் தோற்றுப்போய் இருந்தது.
- இன்னும் சொல்ல நினைக்கிறேன்...

Wednesday, October 14, 2015

இதுதான் வாழ்க்கை என்பதா?

நண்பரையும், அவரது மனைவியையும் பரபரப்பான தி.நகர் ஷாப்பிங்கில் சந்தித்தேன். கையில் ஏழெட்டு பைகள். விதவிதமாக புதுத்துணிகள். அவரது வீட்டில் இத்தனைபேர் இல்லையே என்ற நினைவுடன் ‘ஏதும் விசேஷமா?’ என்றேன்.
புன்னகையுடன் மறுத்தார்கள்.
அவர்களுடன் சில மணித்துளிகள் இருந்தேன்.
‘அந்த பாட்டிக்கு உடுத்திக்கிறதுக்கு இந்த காட்டன் புடவை சரியா இருக்கும்...’
‘அவர் 4 முளம் கட்டுவாரா? 8 முள வேட்டியா?’ என்று யாருக்கோ அலைபேசியில் உறுதி செய்து கொண்டார்கள்.
‘அவர் லைட் கலர் சட்டை தானே போடுவார். கொஞ்சம் தரமா பாத்து கொடுங்க. ஒரு வருடமாவது உழைக்கணும்’
‘ராணியம்மா கலருக்கு இந்த புடவை மேட்சா இருக்கும்...’
‘பிட்‘ பிளவுஸ் வேண்டாம். டூபைடூ பிளவுஸ் கட் பண்ணி வாங்குங்க. நல்லா லைப் இருக்கும்...
- ஒவ்வொன்றையும் தேடிப்பிடித்து ரசித்து,ரசித்து வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
நண்பரின் மனைவி சொன்னார்: அவருக்கு (கணவருக்கு) வரும் தீபாவளி போனசில் 10 சதவீதம் அமௌன்ட் தனியா எடுத்து வச்சுருவோம். அதில, வீட்ல, தினமும் பால் கவர் போடும் பாட்டி, வீடு பெருக்கி சுத்தம் செய்யும் பணிப்பெண், அபார்ட்மென்ட் சுத்தம் செய்து கோலமிடும் பெண், தினமும் வீடு தேடி வந்து துணிகளை அயர்னுக்கு வாங்கிச் செல்பவர், எங்க தெருவை தினமும் சுத்தமாக வைத்துக் கொள்ளும் சுகாதார பெண் ஊழியர், வாட்டர் கேன் போடும் பையன், பேப்பர் போடும் பையன், காஸ் சிலிண்டர் வினியோகிப்பவர் என்று நம்முடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு தீபாவளிக்க புதுத்துணி வாங்கி தருவோம். சில ஆண்டுகளாக எங்களால முடிஞ்சத செஞ்சிட்டு வர்றோம். அவங்க ஒவ்வொருவருக்கும் நாமளே கடை, கடையா போய் வாங்கி தரும்போது அவங்க முகத்தில தெரும் சந்தோஷத்தை பாத்து அனுபவக்கிறதிலும் ஒரு ஆனந்தம் இருக்குங்க...
- என்று ‘வெள்ளந்தி’யாக பேசி முடித்தார்.
தென்மாவட்டத்தில் இருந்து சென்னை வந்த நடுத்தர குடும்பம் அது. அப்படி ஒன்றும் பணக்காரர்கள் அல்ல. இருந்தாலும் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை எளியவர்களுக்குச் செய்ய வேண்டும் என்ற அவர்களின் மனது அறிந்து விழிகள் நனைந்தன.
பண்டிகைகளின்போது பலரும் பணியாட்களுக்கு பணமோ, பொருளோ செய்வது செய்வது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், அந்த நடுத்தர குடும்பத்தின் வருமானத்தில்கூட ஒரு பகுதி எளியவர்களுக்கு என ஒதுக்கி, அதை ‘இந்தாபிடி’ என பணமாக தராமல், கடை, கடையாக போய், தங்கள் குடும்ப உறுப்பினர் போல, மனம் விரும்பி தேடித்தேடி எடுத்து தந்த துணிகளில் நுõலிழைகளுடன், பாசமும், அன்பும் இணைந்தே பின்னப்பட்டிருக்கும் என்பது நிஜம்.
எந்த சட்டமும் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு குடும்பமும் இதுபோல் இருந்துவிட்டால் பூமியில் எல்லார் முகத்திலும் மகிழ்ச்சி என்ற பூ மலரும். சமூகத்தில் ஒரு பிணைப்பும், அமைதியும், மகிழ்ச்சியும் மலரும்.
வாழ்க! அந்த உதாரண குடும்பம்!!   

Friday, August 14, 2015

அம்மாவின் பட்டியல் நீள்கிறது... 




‘எனக்கொரு ஆசைடா. இனிமே எப்ப பாக்கப்போறோமோ. மெட்ரோ ரயிலை கொண்டு போய் காட்றா...’ - 75 வயது கடந்த என் அம்மாவின் நினைவூட்டல். காலையில் இருந்து மணிக்கொருதரம் வந்த டிவி நேரலைகளை பார்க்கும்போதெல்லாம், திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தார்.
‘சரி போலாம்!. திங்கட்கிழமைக்கு மேல... ‘பீக்’ அவர் இல்லாத... கூட்ட நெரிசல் இல்லாத நேரமா பாத்து நான் அழைச்சுட்டு போறேன்...’ என்று சொல்லி முடிப்பதற்குள்...
‘இன்னிக்கு போனா, ஜெயலலிதா கொடி காட்டுறதையும் பாத்திரலாம்ல...’
இதுக்கு மேல ‘பிளான்’ பண்ணினா, சரியா வராதுன்னு, ‘கிளம்புங்க’னு உடனே புறப்பட்டோம். அம்மா, மனைவி, மகள் - 3 பெண்கள் பிளஸ் நான். பள்ளிக்குச் சென்ற என் மகனுக்கு தெரியாமல் நடந்தது ‘ரகசிய பிளான்’.
‘வீட்ட பாத்துக்கங்க’ அப்பாவிடம் சொல்லிவிட்டு புறப்பட்டோம்.
வீட்டு வாசலைக் கடந்தாலே, ‘பாத்ரூம் வர்றமாதிரி இருக்கு’ என பீதி கிளப்பும் என் 85 வயது அப்பா முகத்தில் சோகம்.
‘என்ன காவல் காக்க வைத்துவிட்டு போறீங்க. நான் எப்ப ரயில பார்க்க?’
அவரை தனியாத்தான் சமாளிக்கணும் என்ற முடிவுடன், ‘அடுத்த வாரம் நீங்க’ என்று ஆறுதல் சொல்லி கிளம்பினோம்.
ஆலந்துõர் மெட்ரோவில் கரை வேட்டிகள் கூட்டம்.
‘வண்டி கட்டி’ ஊர்களை கடந்து வளர்ந்த எனது அம்மாவுக்கு மெட்ரோ நவீனங்கள் புது பரவசம். பார்வை குறைபாட்டிலும், முதுகு வலியிலும், ஒரு மணி நேரமாக மெட்ரோ ஸ்டேசனை சுற்றி பார்த்தபடி இருந்தார். ரயில் பயணத்தின்போது இருக்கையில் அமராமல், பிரமாண்டமாய் பரந்து, விரிந்து கிடந்த சென்னை மாநகரை ஜன்னலுக்கு வெளியே ரசித்தபடி வந்தார்.
வயது, ஆக, ஆக வெளி உலகை பார்க்க வேண்டும் என்ற அதீத ஆவல் அம்மாவுக்கு!
பல நேரங்களில், நமக்கு ஏற்படும் ‘வாழ்க்கை அழுத்தங்களில்’ உடன் இருப்பவர்களின் விருப்பங்கள் நமது செவிகளைக்கடந்து மனதை தொடாமலே போய்விடுகிறது.
இன்று எனது காதுகள் அடைபட்டு, மனக்கதவுகள் திறந்திருந்த வேளையில் ஒலித்த, எனது அம்மாவின் குரல் என் சோம்பல் கலைத்தது. சோகம் விரட்டியது.
அம்மாவின் சின்னச் சின்ன ஆசைகளையாவது உடனே நிறைவேற்றுவோம் என அலுவலகத்துக்கு அரை நாள் லீவு சொல்லி, அம்மா கேட்டவுடன், முதல்நாள், முதல் பயணமாக மெட்ரோவில் பயணித்தோம்.
சட்டசபை, செயின்ட் ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் மாளிகை என அம்மாவின் பட்டியல் நீள்கிறது...
Even when failure
Squees and stops me - my smile never vanishes

I wont get frustrated
I wont get tensed

Rather, I wll try again
They are stepping stones of success
Never min who ever says.

I wll bring my sun shine
I wll bring my sun shine
I wll bring my sun shine

..................
என் மகள் எழுதிய கவிதை.
MindFresh -ன், Flying Elephants பயிற்சியில் ஒவ்வொரு குழந்தையும், தங்களுக்கு தாங்களே எழுதிக்கொள்ளும் தன்னம்பிக்கை கவிதை.
எனக்கு எழுதியது போலவே இருக்கிறது....
நன்றி :MindFresh



இன்னமும் அலை மோதுகிறது...
கலாம் மூச்சுக்காற்று!


கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழகம் சென்றிருந்தேன். அங்கே மக்கள் ஜனாதிபதி
அப்துல் கலாம் அவர்கள் தங்கி இருந்த கெஸ்ட் ஹவுஸ் அறையை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது.
கலாம் வாழ்க்கை முறை பற்றி அவரது உதவியாளர் பாலசுப்ரமணியன் சொல்ல, சொல்ல, கலாம்
பயன்படுத்திய நாற்காலிகள், மேஜை, படுக்கை, தலையணை என எல்லாமும் என்னோடு
பேசிக் கொண்டிருந்தன.
குடியரசு தலைவர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டதும் அவருக்கு வந்த கடிதங்கள்.
மாணவர்களிடம் பாடம் எடுக்க, அவர் கைப்பட எழுதிய அறிவியல் கருத்தரங்க குறிப்புகள்.
இசையில் கரைந்து அவர் உருகி, உருகி கேட்ட இசை குறுந்தகடுகள், மியூசிக் பிளேயர்.
அவரை தேடிவந்த அன்பு பரிசுகள்.
கோவை பிஎஸ்ஜி கல்லூரி மாணவர்கள் தொடங்கி மாணவச்
செல்வங்கள் அவரை வரைந்து அனுப்பி இருந்த ஓவியங்கள். அவர் தேடித்தேடி படித்த புத்தக
பொக்கிஷங்கள். அவர் தோளில் விழுந்த சிறு சால்வையைக்கூட அவர் எங்கும் எடுத்துச் செல்லாமல்
அப்படியே விட்டு சென்றிருந்த தன்னலமற்ற தலைவனின் பண்பு விழிகளை நனைத்தது.
அங்கு வந்திருந்த ஒரு வார இதழ் போட்டோகிராபர், கலாம் உதவியாளரிடம், ‘பாலு சார்’ (தனது
உதவியாளரை இப்படித்தான் அழைப்பார் கலாம்), அந்த கட்டில் அருகில் நின்று தலையணையை
தொடுங்கள்’ என்றார்.
‘சாரி சார். கலாம் சார் பயன்படுத்திய பொருட்கள் எதையும் நாங்கள் தொடமாட்டோம். அது
அவருக்கு நாங்கள் செய்யும் மரியாதை’ என்று பதைபதைப்புடன் அவர் மறுத்தார்.
நிஜம்தான். அவர் தொட்டு புழங்கிய பொருட்களில் இன்னமும் அவர் விரல் ரேகைகள் ஓடுகின்றன.
அவர் வசித்த அறைகளில் இன்னமும் அவரின் மூச்சுக்காற்று அலை மோதுவது போன்ற உணர்வு...
கலாம் வசித்த அறைகளில் நாம் இருந்த அந்த நிமிடங்கள், அவர் நம்மோடு துறுதுறுவென
பயணிப்பது போலவும், பேசிக்கொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.

Friday, March 20, 2015

அப்ப, தாடி தாத்தா சொன்னதெல்லாம் பொய்யா? 


ஓம் ஏகதந்தாய வித்மஹே... வக்ர துண்டாய தீமஹி ...
விநாயகனை துதிக்கத் தொடங்கிய சில நொடிகளில் புயல் வேகத்தில் சுலோகம் சொல்லி முடிப்பான் அந்த பொடியன்.
அப்போதெல்லாம் அவன் வயது 7. ஆஞ்சநேயர், முருகன் என அத்தனை பக்தி சுலோகங்களும் அத்துப்படி.
‘பிரி மெச்சூர் பேபி’. எட்டு மாதத்தில் தாயின் கருவறையில் இருந்து எட்டிப்பார்த்தவன். 5 வயது வரை சரியாக பேச்சு வராது. எழுத வராது. வட்டம் போடவே கஷ்டப்படுவான். இருட்டான பகுதிக்குள் தனியே செல்ல மாட்டான். வீட்டுக்குள் இருக்கும் பாத்ரூம் செல்வதாக இருந்தாலும் துணை இருக்க வேண்டும்.
இப்போது 10ம் வகுப்பு தேர்வு எழுத இருக்கிறான். ‘நல்ல மார்க் வாங்க வேண்டும். படித்தது நினைவில் வரவேண்டும். அம்மனை வேண்டி புடவை சாற்ற வேண்டும். கோயிலுக்கு போய் வரலாம் வா’ என்று அழைத்தபோது வரவில்லை.

‘சாமின்னு ஒன்னு இல்ல... பொய் சொல்லாதீங்க. நான், வரமாட்டேன்!’ - மிக தெளிவான பதில் அளித்தான்.
கடந்த முறை திருநெல்வேலி சென்றிருந்தபோது, ஒரு கிராம கோயில் மூலவரை பார்த்து, ‘வேலிகள்ளயும் இதே கல்லு<தான் இருக்கு. இங்க சாமீன்னு கும்பிடுறீங்களே’ என்று பதற வைத்தான்.
‘நீங்கள்லாம் கம்பெல் பண்றீங்களேன்னுதான். நான் கோயிலுக்கு வர்றேன். விபூதி வைக்கிறேன்’ என்பான் பலசமயம்.
‘ஒரே சாமீ, எப்படி இத்தனை பேரையும் பார்கிறார்?....’
‘தாத்தா சின்ன வயசில இருந்து கடவுள்ட்ட வேண்டுறாங்க. எதுவும் நடக்கல...’
‘நீ, தினமும் சாமிகிட்ட வேண்டிக்கிற உனக்கும் இன்னும் ஒன்னும் கொடுக்கல...’
‘நான், சின்ன வயசில எத்தனையோ வேண்டியிருக்கேன். சாமி ஒன்னும் கொடுக்கல...அப்புறம் எப்படி சாமி இருக்குன்னு சொல்ற...?’
‘எனக்கும் சாமீ மேலயும் நம்பிக்கையில்லை, பேய் மேலயும் நம்பிக்கை இல்லை. இப்பல்லாம் இருட்டை பார்த்தா பயப்பட மாட்டேன்....நீங்கதான் எமனை கும்பிடுவீங்க. நான் பயப்பட மாட்டேன்...’
‘நீங்க, பழம், பால்னு சாமிக்கு வச்சு நிறைய வேஸ்ட் பண்றீங்க...’
- இப்படியாக தினம், தினம் கருத்து பரிமாற்றங்கள் எனக்கும், எனது 15வயது மகன் முகிலுக்கும்.
கடவுள் இல்லை. கடவுளால் எதுவும் ஆகாது என்று கறாராக வெளிப்படுகிறது அவனது கருத்து.
அம்மாவின் இடைவிடாத அறிவுறுத்தலால், பத்தாம் வகுப்பு தேர்வின்போது, மதுரை செல்லத்தம்மன் கோயிலில் உள்ள ‘அரசு - வேம்பு’ இணைந்த பிள்ளையாரை நான் சுற்றி வந்த ஞாபகம் இன்னும் நினைவில் அலைமோதுகிறது.
இப்போது, எனது மகனுக்கு கடவுள் மறுக்கும் சுதந்திரம் கிடைத்துள்ளது.
பள்ளிக்கூட நாட்களில் படித்திருக்கிறான்போல, கடைசியாக, ஒன்று சொன்னான்: ‘அப்ப, அந்த தாடித் தாத்தா சொன்னதெல்லாம் பொய்யா?’.
அதன்பின், அவனது எல்லா கேள்விகளுக்கும் என் மவுனமே பதிலாக அமைகிறது.

'' கடவுள் இருப்பதை என்னாலும் நிரூபிக்க முடியாது. கடவுள் இல்லை என்பதை என் மகனாலும் நிரூபிக்க முடியாது என்பதே நிதர்சனம்!''

Friday, March 6, 2015


பார்த்த நாள் முதல்
பார்வையால் தவம் இருக்கிறேன்!

நெருங்கி வராமல்
தொலைவில் இருந்தே
அழகு காட்டுகிறது
என் அன்பு நிலா!


பல சமயங்களில்
நெருக்கத்தைவிட
இடைவெளிகள் தான்
இனிமை தருகின்றன!

நிலா -
நீ தேய்ந்தாலும் அழகு
வளர்ந்தாலும் அழகு!

Saturday, February 28, 2015


 
ஒரு வாழ்க்கை... சில வார்த்தை!

1967 பிப்ரவரி 27
இப்போது, என் வயதை கணித்திருப்பீர்கள்!
எதிர்பாராத நண்பர்களிடம் இருந்தும், எதிர்பார்த்து காத்திருந்த  நண்பர்களிடம் இருந்தும் வாழ்த்து அழைப்புகள். வாட்ஸ் அப்  தகவல்கள்.
என் மகளும், மகனும் மலர் கொத்து வழங்கி வாழ்த்தினார்கள்.
கைகுலுக்கல்களும், வாழ்த்துக்களும் மட்டுமல்லாமல், இந்த பிறந்த  நாள், எனது வாழ்க்கை பயணத்தின் முக்கிய திருப்பங்களை தரும்  என்ற எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் எனக்குள் மலரச் செய்திரு க்கிறது.
எங்கே? யார் வயிற்றில் நாம் பிறக்கிறோம் என்பது யாரும் அறிய  முடியாத பிரபஞ்ச சூட்சுமம். என் பிறவி, தவப்பயன் என்றே நான்  பெருமிதம் கொள்கிறேன்.
வெறும் பத்துக்கு பத்து அளவிலான அறைதான் ஆரம்ப கால வசிப் பிடம். அதற்குள் 4 சகோதரிகள், அப்பா-அம்மாவுடன் நான்.
வசிக்கும் தெருவிலேயே 8ம் வகுப்பு வரை படிப்பு. சேதுபதி மேல் நிலை பள்ளியில் 9ம் வகுப்பு சேரும்போதுதான் அடுத்த தெருவே  எனக்கு  அறிமுகமானது. கல்லுõரி படிப்புக்காக, காரியாபட்டி  பஸ்களில் பயணித்தபோதுதான் மதுரை நகரம் அறிமுகமானது.
அதுவரை பாட புத்தகங்களில் தவிர, அறிவியல், வரலாறு, அரசியல்  அறியாதவன். இவை அனைத்தும், பணியில் சேர்ந்ததும் நான் கற்றுக்  கொண்ட இடம் தினமலர்.
‘ஒரே பையன்’ என்ற செல்லத்தால், அக்கா-தங்கைகள்கூட அறிய õமல் தனி கவனிப்பாக ‘பன்’ பார்சல் என் கையில் சேர்ப்பார் அப்பா.  நரசுஸ் கவரில் காபி மணக்க வரும் அந்த ‘பன்’ ருசித்த வாசம்  இன்னும் என் நினைவில்.
இப்போதும் சிலர், ‘பிழைக்கத் தெரியாதவனா இருக்கீயே. வாங்குற  சம்பளத்தை அப்படியே வீட்டு கடனுக்கு கொடுத்திடு. மிச்சம் இரு க்கிற காசில குடும்பம் நடத்து. அப்பா-அம்மாவ முதியோர்  இல்லத்திலவிட வேண்டியதுதான’ என்று சொல் அம்புகளால் என்னை  தைப்பார்கள்.
இன்னும் பலர், ‘அம்மா-அப்பாவை வச்சு காப்பாத்துறீங்களே.  அதாங்க புண்ணியம்’ என்பார்கள்.
புண்ணியம் என்று ஒன்று ‘என் கணக்கில்’ சேர்ந்தால், அதை  செலவிடும் அளவுக்கு நமக்கு ஆயுள் இருக்குமா தெரியாது. ஆனால்,  என் மனம் நினைத்தது இதைதான்...
‘தன் வயிறு நிரம்பாவிட்டாலும், குழந்தைகள் பசியால்  வாடிவிடக்கூடாது என கவனமாய் எங்கள் கரம்பிடித்து, வாழ்க்கை  பயணத்தில், இத்தனை துõரம் நம்பிக்கையோடு அழைத்து வந்த என்  பெற்றோருக்கு நான் செலுத்தும் ஒரு சிறு நன்றிக் ‘கடன்’, அவர்கள்  என்னுடனே வசிப்பதும், வாழ்வதும். அதுவும் இந்த பிறவியிலேயே  எனக்கு வாய்த்திருப்பது மிகவும் சிறப்பு என கருதுகிறேன்.
...
அது 1988ம் ஆண்டு. கல்லுõரி படிப்பு முடித்த கையுடன், அமரர்  டிவிஆர் பிறந்த நாளில்தான் தினமலரில் பணி தொடங்கினேன்.
‘ஒரு பத்திரிகையாளன், பொது இடங்களில் எப்படி அணுக ÷ வண்டும்?. பல்கலைக்கழகங்கள்கூட சொல்லித் தராத அத்தனை  வாழ்வியல் ஒழுக்கங்களையும் அன்றாட சந்திப்புகளில் திரு. சுரேஷ்  - திரு. மகேஷ் அவர்களிடம் இருந்து அந்த நாட்களில் கற்றுக்  கொண்டேன்.
90 களில், ‘நட்சத்திரங்கள்’ என்ற எனது முதல் கவிதை கிறுக்கலை  அங்கீகரித்து ஊக்கப்படுத்தி வாரமலரில் திரு. ரமேஷ் சார் அவர்கள்  அச்சேற்றினார்கள். எனக்கும் எழுத வரும் என்பதை உணர வைத்த  ஆசான் அவர்.
கோவையில் எனக்கு 7 ஆண்டுகள் முழு சுதந்திரம் கொடுத்தார் ஸ்ரீ  மகேஷ் அவர்கள். அதனால்தான், விஜயகுமார், செல்வக்குமார்,  விஜில்குமார், யோகா, கோவிந்தராஜ், அய்யாசாமி, மார்க்கபந்து,  விஜயராஜ், விஸ்வநாத், பிரபாகரன், முரளி, உமாபதி, சிவசரவணன்  போன்றோரை அடையாளம் கண்டு அன்பான ஆற்றல்மிக்க குழுவை  உருவாக்க முடிந்தது.
இன்னும், சுதர்சன், ஐயப்பன், புண்ணியமூர்த்தி, திரு.வரதன், தி ரு.மணி என அன்பு வட்டம் எப்போதுமே எனக்கு ஆதரவாய்  அமைந்தது.
பசிக்கும்போது மட்டுமே உணவின் நினைவு வரும். விழிகள் ÷ சார்வடையும்போது மட்டுமே உறங்கச் செல்வேன்.
அப்போதெல்லாம் பாண்டிச்சேரி தினமலரில் ஏதாவது விழா என்றால்  முதல் ஆளாய் போக ஆசைப்படுவோம். திரு.வெங்கடேஷ்  அவர்கள் அலுவலகத்தின் உபசரிப்பு அப்படி.   
மதுரையில் இருந்த காலங்களில் திரு. பாலாஜி சார்  அவர்களுடன்  பேச, அருகில் நிற்க ஆசைப்படுவோம். ‘யாரை எதிர்கொண்டாலும்  அன்பான விசாரணை. சாப்பிடச் சொல்லும் பாங்கு’ எல்லாரையும்  கட்டிப்போட்டது.
சென்னையில் கால் பதித்த நாள் முதல், கருத்து சுதந்திரத்துக்கும்,  எழுத்து சுதந்திரத்துக்கும் சுதந்திரமாய் வழி கொடுத்தவர் திரு. ÷ காபால்ஜி அவர்கள். எந்த பிரச்னை வந்தாலும், ஊழியர்களை  பாதுகாக்கும் அவரின் நெஞ்சுரம் வேறு எங்கும் நான் பார்த்ததில்லை.
..
அக்கவுண்டன்ட் வேலைக்கு அப்ளிகேஷன் போட்டுவிட்டு, ‘புரூப்  ரீடர்’ பணிக்கு தேர்வானவன் நான். அதன்பின் நிருபர், தொடர்ந்து  உதவி ஆசிரியர், அப்புறம் செய்திப் பிரிவு பொறுப்பாளர் என பல  முகங்கள். கோவையில் வீடு வீடாகப்போய் வேறு இதழ் வாசகரை  சந்தித்து ஏன் தினமலர் படிப்பதில்லை என்று சர்வே எடுப்பது முதல்  திருப்பூர் ஏஜன்ட்டை அழைத்துக் கொண்டு ஏற்றுமதி நிறுவனங்களில்  ஏறி, இறங்கி உங்களுக்கு தினமலரில் கூடுதல் தகவல் என்ன சேர்க்க  வேண்டும் என்று கேட்டுகேட்டு செய்தி வெளியிட்ட காலங்கள்  அவை.

தினமலரில் நான் கால் பதித்த காலத்தில் எனக்கு கிடைத்தது பாசமிகு  உறவுகள். திரு.பார்த்திபன், திரு. திருமலை, திரு. முருகராஜ், திரு.  கந்தவேல், திரு. குமரன், திரு. காளிதாஸ், திரு. முருகன் அதன்பின்  திரு. ராமன், திரு. பாஸ்கர், திரு. கபிலன்  அவர்கள் (சிலர் பெயர்கள்  விடுபட்டிருக்கலாம்...) என என்னை சுற்றி இருந்த இந்த அத்தனை  வைரங்களும் என்னை நானே பட்டை தீட்டிக்கொள்ள உதவின.

சென்னையில் திரு. கதிர் சாருடன் பணியாற்றிய சில மாதங்கள்  மறக்க முடியாதவை. குடும்பத்துடன் சென்னை வந்த சவாலான  நாட்களில், திரு.இரா. குமார் சாரும், திரு. சீனிவாசனும் சென்ட்ரல்  ரயில் நிலையம் வந்து வீட்டில் கொண்டு விட்டனர். சரவண பவனில்  தினமும் காபி சந்திப்புகள். எந்த தகவலையும் தனது நினைவாற்றலில்  இருந்து அபாரமாக சொல்லும் பாங்கு என திரு. இரா. குமார் வித்தி யாசமான மனிதர்.

‘சீனியர்-ஜூனியர்’ பாகுபாடு இல்லாமல் அவர்கள் என்னிடம்  பழகிய அந்த நாட்கள் இன்னமும் நெஞ்சில் ஈரம் வார்க்கும்.
நிருபராக மதுரையில் சுற்றிக் கொண்டிருந்த நான் 1993ல் கோவை  பதிப்பு பொறுப்புக்கு அனுப்பப்பட்டேன். இடையில் ‘சேலம் துரத்த’,  அதன்பின் 2000ல் சென்னை வந்தேன். இப்படியே ‘விளைய õட்டாக’... 25 ஆண்டுகள் தினமலரில் நிறைவு செய்து விட்டேன்.

இன்னமும் பஸ், ரயில்களில் ஜன்னலோரம் அமர்ந்து பின்னோக்கி  ஓடும் மரங்களை ரசிக்கும் குழந்தை மனமும், வெளியில் எங்கு  சென்றாலும், ‘சட்டையின் முதல் பொத்தனை போட்டு கொண்டிரு க்கிறோமா?’ என உறுதி செய்து கொள்ளும் ஒழுக்கமும், தினமலரில்  பணியில் சேர்ந்த அதே முதல் நாள் புத்துணர்வும் இன்றைக்கும்  ஏற்படுகிறது.

அக்கா-தங்கைகளின் அன்பை பெற்றதும், அம்மா-அப்பாவுடன்  தினமும் உணவு உண்பதும், மனைவி, குழந்தைகளை நேசிப்பது  தவிர வேறு எதையும் பெரிதாக நினைக்கவில்லை. எனது மகள் ஜெ யரூபினியும், மகன் முகில் கார்த்திக்கும்தான் எனக்கு புதுப்புது  உலகத்தை அறிமுகம் செய்தார்கள். அவர்களின் ஆர்வமிகு ÷ கள்விகள்தான் மறுபடி, மறுபடி குழந்தை பருவத்துக்கு என்னை  அழைத்துச் செல்கிறது.

உணர்வுகள் துளிர்க்கும் இந்த நன்நாளில், எனது இத்தனை துõர  வாழ்க்கை பயணத்தில், நான் ‘குருவாக’ மதிக்கும் கோவை ஸ்ரீ  ஜெகநாத சுவாமிகள், 4 ஆண்டுகளுக்கு முன் என்னைப் பற்றி எனது  ‘பிளாக்’கில் தெரிவித்த கருத்துக்கள்தான், என்னைப்பற்றிய முழு  மதிப்பீடு என்று கருதுகிறேன். அவரின் அந்த வைர வார்த்தைகள் இ தோ:

‘...சேது நாகராஜன் அவர்களை எனக்குக் கடந்த பதினைந்து  ஆண்டுகளாக நன்கு தெரியும்.
அனுபவங்கள் அவரை ஒரு சிறந்த மனித நேயப் பண்பாளராக உ ருவாகி வருவதைக் கண்டு வியக்கின்றேன்.
வாழ்வியல் விழுமியங்கள் சேதுவுக்கு இயல்பாக அமைந்திருப்பது  அவர் பெற்றோர் செய்த தவப் பயன் என்று நினைக்கிறேன்.  தன்னைப் பொறுத்தவரை மிகச்சரியாக் கடமை ஆற்றுவது அவரது  பலம்.
எதிலுமே முழுமைத் தன்மையை எதிர்பார்ப்பது அவரது பலவீனம்  என்று நான் நினைப்பது உண்டு.
எனக்கு சேது மீது மிகவும் பாசம் ஏற்படக் காரணம், எந்த நட்பையும்,  உறவையும் அவர் எக்காலத்தும் எந்தவிதமான பிரதிபலனும் கரு தாமல் உன்னதமாக மதித்துப்போற்றி மகிழ்வதுதான்.
அவருக்கு இந்தச் சமுதாயத்தின்மீது நிறைய கோபம் உண்டு.  ஆனாலும், எப்போதும் எல்லோரிடமும் அன்பு செய்யும் மனமும்  படைத்தவர் அவர்.
நிறைய திறமைகளைத் தன்னுள் பொதிந்து வைத்துள்ள அவருக்கு  வருங்காலம் நிறைய வாய்ப்புகளையும், வெற்றிகளையும் அளிக்க  வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்...’

- அன்புடன் சேது