Tuesday, February 16, 2016

பிரார்த்தனைகளால்தான்
வலியை மறக்க முடிகிறது...


ஒடிசலான தேகம். ஒரு மகன் உண்டு. இவர்தான் வீட்டு வேலை பார்த்து மகனை படிக்க வைத்தார். சில மாதங்களுக்கு முன் அறிமுகம் ஆனார்.
4, 5 வீடுகள் பெருக்குவார். அப்பார்ட்மென்ட் பெருக்கி, சுத்தம் செய்வார். பாத்திரம் கழுவி தருவார். கூடுதலாக, எந்த பொருளுக்கும், பணத்துக்கும் ஆசைப்படாத நடுத்தர வயது பெண்மணி அவர்.
சில நாட்களாக அவர் வரவில்லை. அலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
அபார்ட்மென்ட் நடைபாதையெங்கும் காய்ந்து, உதிர்ந்து கிடந்த இலைகள் மவுனம் பேசின...
கேன்சர் தினமான இன்று காலை அவரது தங்கை வந்தார். ‘சார், எங்க அக்காவுக்கு குடல்ல கேன்சராம். ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கோம். அவர் இனி வரமாட்டார்...’ என்றார்.
தன் உழைப்புக்கு வழங்கப்படும் ஊதியம் தவிர வேறு எதையும் எதிர்பார்க்காத எளிமையானவருக்கா இப்படி ஒரு சங்கடம்.
சில ஆண்டுகளாக எனது அம்மா, அவருக்கு தீபாவளி புடவை வாங்கும் இரண்டாக வாங்கி ஒன்றை அந்த பெண்ணுக்கும் தருவார். சிரிப்போடு பெற்றுக் கொள்வார்.
இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறேன், விரைவில் அவர் நலம் பெற வேண்டும் என்று!
பிரார்த்தனைகளால்தான் வலியை மறக்க, மறைக்க வேண்டி இருக்கிறது...
இப்படித்தான் சமீபத்தில் இன்னொரு வலி வந்து போனது...
எப்போதும் சிரிக்க, சிரிக்க பேசுவார் அந்த மாமி. ‘சாய் ராம்’ காபி சாப்பிடுங்க... ‘சாய் ராம் வீட்ல அம்மா, அப்பாலாம் சவுக்கியமா... என்று எல்லாரையும் பாபாவின் நாமம் சொல்லியே அன்பாக அழைப்பார்.
மேற்கு மாம்பலம் குடிவந்ததில் இருந்து கிட்டதட்ட 10 ஆண்டுகளாக பார்த்திருக்கிறேன் எப்போதும் பாபா சேவைக்காகவே அவரும், அவரது கணவரும் அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.
அவர் முதல் மாடியிலும், நாங்கள் 2வது மாடியிலுமாக குடிருந்தோம்...
திடீரென அவரது நடமாட்டம் குறைந்தது. அவர் வீட்டு கதவுகள் சாத்தியே இருந்தன. அவரது நடை, பாவனை, தோற்றத்தில் மாற்றம்.
‘உடல் நிலை சரியில்லை சாய் ராம்’ அவ்ளோதான் என்று அப்போதும் சிரித்தபடியே சொன்னார்...
சில மாதங்களுக்கு முன் அவர் தலை முடி உதிர்ந்து முகம் வெளிரத் தொடங்கி இருந்தது...
சென்னையில் 2 முறை பெரு மழை உச்சம் தொட்டன. அவர் ஒரு பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு முதல் மழையின் போது வெள்ளம் ஆஸ்பத்திரி உள்ளே புகுந்ததால் சிகிச்சை தொடரப்படாமல் வெளியேற்றப்பட்டார்.
இரண்டாவதாக, டிசம்பர் 1ம் தேதி கொட்டிய மழை நாளில் வேறொரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சைகள் தோற்றுப்போய் அவரது வாழ்க்கை பயணத்தின் இறுதி நாட்கள் அவை என்று அருகில் இருந்தவர்களுக்குக்கூட தெரியாது.
மறுநாள் சென்னையே வெள்ளக்காடான நாட்கள்...
‘சாய்ராம், என் மனைவிக்கு பிரஸ்ட் கேன்சர். பிழைப்பது கடினம்னு டாக்டர்கள் சொல்லிட்டாங்க. ஊருக்கெல்லாம் சேவை செய்தாள். மருத்துவ முகாம் ஏற்பாடு செய்து, எல்லாரையும் செக்கப் செய்துக்க சொன்னாள். அவ உடலை அலட்சியப்படுத்திட்டா - அவரது கணவர், நா தழுதழுக்க பேசினார் ...
கேட்பதற்கே அதிர்ச்சியாக இருந்தது...
வாழ்க்கை எத்தனை வலி மிகுந்ததாக இருந்தாலும், மரணம் இனிதாக, எளிதாக இருக்க வேண்டும் என்பதே எல்லாரின் ஆசையாக இருக்கும்.
அவரின் சிரித்த முகத்தை, மீண்டும் ஒருமுறை ஆஸ்பத்திரி படுக்கையில் பார்க்க என் மனம் தயாராகவில்லை...
வெள்ளம் வடிவதற்கு முன்பே அவரின் உயிர் பிரிந்துவிட்டது!
இல்லம் எடுத்து வரப்பட்ட அவரது உடலுக்கு மரியாதை செய்தோம்... இன்னமும் அவரது அன்புக் குரல் அபார்ட்மென்டில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
நண்பர்களுக்கு ஒர் அன்பு வேண்டுகோள்: வாழை இலையில் தரும் பார்சல் உணவுகளை மட்டுமே வாங்கி பயன்படுத்துங்கள். பிளாஸ்டிக் கன்டெய்னர், பாலிதீன் பைகளில் அடைத்துத்தரப்படும் சூடான உணவு பொருட்கள் உண்பதை தவிருங்கள். கேன்சருக்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதில் இதுவும் ஒன்று.

No comments:

Post a Comment

Comment as என்ற இடத்தில் Anonymous என்பதைத் தெரிவு செய்து கொள்ளலாம் அல்லது gmail அக்கவுண்ட் இருந்தால் google என்ற விவரத்தைத் தெரிவு செய்து கொண்டு, உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.