Wednesday, October 14, 2015

இதுதான் வாழ்க்கை என்பதா?

நண்பரையும், அவரது மனைவியையும் பரபரப்பான தி.நகர் ஷாப்பிங்கில் சந்தித்தேன். கையில் ஏழெட்டு பைகள். விதவிதமாக புதுத்துணிகள். அவரது வீட்டில் இத்தனைபேர் இல்லையே என்ற நினைவுடன் ‘ஏதும் விசேஷமா?’ என்றேன்.
புன்னகையுடன் மறுத்தார்கள்.
அவர்களுடன் சில மணித்துளிகள் இருந்தேன்.
‘அந்த பாட்டிக்கு உடுத்திக்கிறதுக்கு இந்த காட்டன் புடவை சரியா இருக்கும்...’
‘அவர் 4 முளம் கட்டுவாரா? 8 முள வேட்டியா?’ என்று யாருக்கோ அலைபேசியில் உறுதி செய்து கொண்டார்கள்.
‘அவர் லைட் கலர் சட்டை தானே போடுவார். கொஞ்சம் தரமா பாத்து கொடுங்க. ஒரு வருடமாவது உழைக்கணும்’
‘ராணியம்மா கலருக்கு இந்த புடவை மேட்சா இருக்கும்...’
‘பிட்‘ பிளவுஸ் வேண்டாம். டூபைடூ பிளவுஸ் கட் பண்ணி வாங்குங்க. நல்லா லைப் இருக்கும்...
- ஒவ்வொன்றையும் தேடிப்பிடித்து ரசித்து,ரசித்து வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
நண்பரின் மனைவி சொன்னார்: அவருக்கு (கணவருக்கு) வரும் தீபாவளி போனசில் 10 சதவீதம் அமௌன்ட் தனியா எடுத்து வச்சுருவோம். அதில, வீட்ல, தினமும் பால் கவர் போடும் பாட்டி, வீடு பெருக்கி சுத்தம் செய்யும் பணிப்பெண், அபார்ட்மென்ட் சுத்தம் செய்து கோலமிடும் பெண், தினமும் வீடு தேடி வந்து துணிகளை அயர்னுக்கு வாங்கிச் செல்பவர், எங்க தெருவை தினமும் சுத்தமாக வைத்துக் கொள்ளும் சுகாதார பெண் ஊழியர், வாட்டர் கேன் போடும் பையன், பேப்பர் போடும் பையன், காஸ் சிலிண்டர் வினியோகிப்பவர் என்று நம்முடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு தீபாவளிக்க புதுத்துணி வாங்கி தருவோம். சில ஆண்டுகளாக எங்களால முடிஞ்சத செஞ்சிட்டு வர்றோம். அவங்க ஒவ்வொருவருக்கும் நாமளே கடை, கடையா போய் வாங்கி தரும்போது அவங்க முகத்தில தெரும் சந்தோஷத்தை பாத்து அனுபவக்கிறதிலும் ஒரு ஆனந்தம் இருக்குங்க...
- என்று ‘வெள்ளந்தி’யாக பேசி முடித்தார்.
தென்மாவட்டத்தில் இருந்து சென்னை வந்த நடுத்தர குடும்பம் அது. அப்படி ஒன்றும் பணக்காரர்கள் அல்ல. இருந்தாலும் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை எளியவர்களுக்குச் செய்ய வேண்டும் என்ற அவர்களின் மனது அறிந்து விழிகள் நனைந்தன.
பண்டிகைகளின்போது பலரும் பணியாட்களுக்கு பணமோ, பொருளோ செய்வது செய்வது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், அந்த நடுத்தர குடும்பத்தின் வருமானத்தில்கூட ஒரு பகுதி எளியவர்களுக்கு என ஒதுக்கி, அதை ‘இந்தாபிடி’ என பணமாக தராமல், கடை, கடையாக போய், தங்கள் குடும்ப உறுப்பினர் போல, மனம் விரும்பி தேடித்தேடி எடுத்து தந்த துணிகளில் நுõலிழைகளுடன், பாசமும், அன்பும் இணைந்தே பின்னப்பட்டிருக்கும் என்பது நிஜம்.
எந்த சட்டமும் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு குடும்பமும் இதுபோல் இருந்துவிட்டால் பூமியில் எல்லார் முகத்திலும் மகிழ்ச்சி என்ற பூ மலரும். சமூகத்தில் ஒரு பிணைப்பும், அமைதியும், மகிழ்ச்சியும் மலரும்.
வாழ்க! அந்த உதாரண குடும்பம்!!