Wednesday, July 13, 2016


அவை விதைப்பதும் இல்லை; அறுப்பதுமில்லை!

பூபதி இன்று அலுவலகம் வரவில்லை. அவர் உணவு உண்ணும் மதியம் 3 மணி சுமாருக்கு, எங்கிருந்தோ வரும் காகங்கள், தலையை அங்கும், இங்குமாக திருப்பி, திருப்பி பார்த்தபடி ஆங்காங்கே அமர்ந்து காத்திருக்கும். கரைந்திருக்கும்.
வீட்டிலிருந்து கொண்டு வந்திருக்கும் உணவை கொஞ்சமாக எடுத்து தயிர் விட்டு குழந்தைக்கு பிசைவது போல பிசைந்து, அதை நாலைந்து பாகங்களாக பிரித்து ஆங்காங்கே மொட்டை மாடி கைபிடி சுவரில் வைப்பார் பூபதி.
தயிர் சாதம் வைத்த நொடியில் மின்னல் வேகத்தில் பறந்து வரும் காகங்கள் அவற்றை லாவகமாக கவ்வி திண்ணும். முதலில் குஞ்சுகளுக்கு எடுத்து செல்லும் காகங்கள் சாதத்தை தன் அலகால் கவ்வி, தொண்டை வரை சேர்த்து எடுத்துச் செல்லும். அதன்பின் ஓரளவு பறக்கத் தெரிந்து தானே உண்ணத் தெரிந்த குஞ்சுகள் உண்ணும். அதன்பின் மிச்சமிருக்கும் உணவை சீனியர் காகங்கள் உண்ணும். இடையே வில்லன்போல உடல் முழுவதும் கருத்த அண்டங்காக்கைகள் வந்துவிட்டால், மற்ற சாம்பல் நிற காகங்கள் அச்சத்துடன் விலகி வழிவிடும். அது மிச்சம் வைத்ததால்தான் மற்ற காகங்களுக்கு உண்டு.
காகங்கள் உண்டு களித்து சென்றதும், மிச்சமிருக்கும் பருக்கைகளை தொலைவில் நின்று கொண்டிருக்கும் புறாக்கள் வந்து உண்ணும். அவை சென்றபின், சிதறி கவனிப்பாரற்று கிடக்கும் பருக்கைகள் அணில்கள் வயிற்றை நிரப்பும்.
அலுவலகத்தின் மொட்டை மாடியில் நாங்கள் அன்றாடம் கண்டு மகிழும் காட்சிகள் இவை.
பூபதி இன்று அலுவலகம் வரவில்லை. ஆனால் காகங்கள் வந்துவிட்டன. அரைமணி நேரமாக அவை அங்குமிங்கும் அலைபாய்ந்தன. மதிய உணவை வீட்டிலேயே முடித்துவிட்டு நான் காபி மட்டும் எடுத்து வந்திருந்ததால் கையில் உணவில்லை. ஞாபகம் இருந்திருந்தால் வீட்டில் இருந்து கொஞ்சம் தயிர் சாதம் கொண்டு வந்து வைத்திருக்கலாமே என்று மனம் மறுபடி, மறுபடி கூவிக்கொண்டிருந்தது.
நல்லவேளையாக, பெஞ்சமின் உணவு டப்பாக்களோடு அங்கு வந்தார். அவரும் பல நாட்கள் காகங்களுக்கு உணவிடுவார். எப்போதும் மதிய உணவு முடித்து அலுவலகம் வருபவர் இன்று கையில் எடுத்து வந்திருந்தார். பாதி உணவை எடுத்துக் கொண்டு கைபிடிச் சுவரில் வைத்தார். காகங்கள் கும்பலாக பாய்ந்து தின்று தீர்த்தன. என் மனம் குளிர்ந்தது.
‘‘சார், நீங்கள் இந்த உணவளிக்கவில்லையென்றால் காகங்கள் இன்று கஷ்டபட்டுருக்குமே’’ என்றேன்.
‘‘வானில் வட்டமிடும் பறவைகளை பாருங்கள். அவை விதைப்பதும் இல்லை. அறுப்பதும் இல்லை. களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதும் இல்லை. ஆனால்,  ஆண்டவன் அவற்றுக்கு சரியான வேளையில் உணவு அளித்துவிடுகிறான்’’ என்று பைபிள்லயே சொல்லிருக்கு சார். பறவைகளுக்கு எப்படியாவது உணவு கிடைச்சிரும் சார் – என்றார் பெஞ்சமின்.
என் மனம் திடீரென ஜில்லிட்டது. பசியால் வாடும் உயிர்கள் பற்றி இனி கவலை கொள்ள தேவையில்லை. படைத்தவன் இருக்கிறான் பார்த்துக் கொள்வான்.
பூபதிக்குப் பதில் பெஞ்சமினை இன்று ஆண்டவன் பணித்திருக்கிறான்!