Saturday, December 26, 2015

தேடி வந்த தெய்வங்கள்...
நீண்ட மவுனம்... நெடிய அமைதி... வெள்ளத்தில் துவண்ட சென்னையின் ஈர நாட்களுக்குப்பிறகு
இப்படித்தான் இருந்தது என் மனது.
எதையும் எழுத வேண்டாம் என்று இறுக்கமாக இருந்த என் மவுனத்தை கலைத்தார் 70 வயது
ஆண்டாளம்மாள்.
தினமும் 30, 40 வீடுகளின் மாடி, ஏறி இறங்கி ஆவின் பால் பாக்கெட்டுகளை அதிகாலை 4 மணி
முதலே வினியோகிப்பார். வெள்ளம் உலுக்கிப்போட்ட, பால் வினியோகிக்கப்படாத
2 தினங்கள் மட்டும் அவரை பார்க்க முடியவில்லை.
அதன்பிறகு வெள்ளத்திலும் தத்தளித்து சரியான நேரத்தில் பால் பாக்கெட் போட்டுவிட்டுச்
சென்றிருந்தார்.
தரைத்தளம், முதல்தளம் என வீடுகளுக்குள் புகுந்து வேட்டையாடிய வெள்ளத்தால்
ஒவ்வொரு இல்லமும் சகதிக்காடாயின. ஆசை, ஆசையாய் பயன்படுத்திய கட்டில், மெத்தை,
தலையணை, வாஷிங்மிஷின், டிவி, பிரிட்ஜ், துணிமணிகள், வாகனங்கள் என
எல்லாமும் ஒரே இரவில் குப்பைக்கு வந்து மலை, மலையாய் குவிந்தன.
உயர் தட்டு மக்களும், நடுத்தர குடும்பங்களும், குடிசைவாசிகளும் ஒரே இரவில் ஒரே வாழ்க்கை
சூழலுக்குள் தள்ளப்பட்டார்கள். வீட்டுக்குவீடு பல லட்சம் மதிப்புக்கு பொருட்கள் நஷ்டம்.
படுக்க, உடுக்க, புசிக்க என எல்லாவற்றையும் முதலில் இருந்து மீண்டும் தொடங்க வேண்டும்.
பலரது முகத்திலும் பீதி குறையவில்லை. சோகம் அகலவில்லை.
இல்லத்தை வெள்ளம் துடைத்து போட்டுபோன வலி அறியாத குழந்தைகள் பலரும்
துயரத்தின் மிச்சமாய் தேங்கி கிடந்த மழை நீரில் கால் நனைத்து மகிழ்ந்தன.
2 நாட்களாய் வீடுபோய்ச் சேர முடியாமல் சாலையில் அழுது தவித்த ஒரு பெண்ணை
தன் இல்லத்தில் தங்க வைத்திருந்தார் என் இல்லத்துக்கு அருகில் இருந்த திரைப்பட
இயக்குனர் குமார்.
அம்மாவும், மனைவியும் வெளியூர் சென்றுவிட்டு சென்னை திரும்ப முடியாமல் தவித்த
5 தினங்களிலும் எங்கள் குடும்ப சூழல் அறிந்து வேளை தவறாமல்
சுடச்சுட உணவு சமைத்து எனக்கும், என் குழந்தைகள், எனது அப்பாவுக்கும்
பரிமாறி பாசத்தில் நெகிழ வைத்தது என் இல்லத்துக்கு எதிரே வசிக்கும்
பேராசிரியர் அப்துல்நாசர் அவர்களின் குடும்பம்.
என் இல்லத்தில் 4 பேருக்கு இடம் இருக்கிறது. வந்து தங்கிக் கொள்ளலாம் என்ற வாட்ஸ்அப்
தகவல்களும், முகநூல் அழைப்புகளும் ஜனங்கள் முகத்தில் பிரகாசத்தை பிரதிபலித்தது.
வீடு பூராவும்சாக்கடை தண்ணீர் புகுந்துருச்சு. கொஞ்சம் டெட்டால் இருக்குமா என கேட்ட பணிபுரியும் பெண்ணுக்கு 2 பாட்டில் டெட்டால் வாங்கி கொடுத்து, புதுப்பாய், தலையணை,
பெட்ஷீட் வாங்கிக்கோங்க என பணமும் தந்து உதவி நிவாரணம் தந்த குடும்பத்தையும் பார்க்க முடிந்தது.
அரை லிட்டர் பாலை 50 ரூபாய்க்கு விற்றவர்களையும், 30 ரூபாய் வாட்டர் கேனுக்கு நூறு
ரூபாய் வாங்கியவர்களையும் இதே வெள்ளம்தான் அடையாளம் காட்டியது.
எந்த அலைபேசி அழைப்புகளும், அரசாங்க ஆணைகளும், விளம்பர மோகமும் எதிர்பார்க்காமல்
இளகிய மனம் கொண்ட இளைஞர்கள், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கவும், மீட்கப்பட்டவர்களுக்கு
உதவவும் தெருவெங்கும் திரண்டார்கள்.
இத்தனை நாள் ஆலயங்களில் தேடிப்போய் கும்பிட்ட தெய்வங்கள் எல்லாம், மனித உருவில்,
தெருவில் இறங்கி மக்களைத் தேடித்தேடிச் சென்று உதவியதுபோல இருந்தது.
ஆள்பவர்கள் செய்த தவறா? ஆண்டவன் செய்த தவறோ என யாருக்கும் நினைத்துப்பார்த்து
நியாயம் கேட்க நேரமில்லை.
‘அடுத்தது என்ன செய்யப்போகிறாய்? கமான்...’ என்று சென்னை வாழ்க்கை எல்லாரையும்
மீண்டும் சுறுசுறுப்பாக்கியது.
சில தினங்களுக்குப்பின் பால் பாக்கெட் போடும் பாட்டியை பார்த்தேன்.
‘என்ன பாட்டி எப்படி இருக்கீங்க?...’
‘நல்லா இருக்கேன் சாமீ. வெள்ளந்தான் வீட்ல உள்ளத எல்லாம் அள்ளிட்டு போயிருச்சு.
ஆண்டவன் எடுத்துக்கிட்டான். அம்புட்டுத்தான் என்ன செய்யமுடியும்...’
- பொக்கை வாயில் இருந்து கலகலப்பாக சிரிப்பு.
‘உனக்கு என்ன வேணும் சொல்லு வாங்கித்தாரேன்...’
‘எல்லா பொருளும் மீண்டும் கிடைச்சிருச்சுங்கங்ய்யா.. போதும்’ என்றபடி போய்க் கொண்டிருந்தார்.
பலரையும் மிரட்டி சென்றிருந்த சென்னை பேரிடர், அந்த பெண்ணிடம் தோற்றுப்போய் இருந்தது.
- இன்னும் சொல்ல நினைக்கிறேன்...