Tuesday, February 16, 2016

எப்போது நினைத்து பார்த்தாலும்,
அப்பாக்கள் ஆச்சர்யமானவர்களே!


இன்று அப்பாவுக்கு 86ஆவது பிறந்தநாள்!
இறை அருளால், நான்கு தலைமுறை பார்த்துவிட்டார்...
வீடு, மனை, வாகனம் என எதற்கும் ஆசைபடாமல் 86 வயது கடக்கிறார்.
நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம் என்பார். அதையே தினமும் 4 முறையாவது அவரது அம்மா - அப்பா படத்தின் முன் நின்று வேண்டுவார்...
உண்பதில் அவசரம் காட்ட மாட்டார். மிக பொறுமை. தினமும் 3 லிட்டர் க்கு மேல் தண்ணீர் குடிப்பார். வாழ்நாள் முழுக்க மோட்டார் வாகனம் தொட்டதில்லை. நடை அல்லது சைக்கிள்தான்.
அப்பாவின் கரம் பிடித்து, வைகை ஆற்றில் அழகர் இறங்கும் திருவிழா - மீனாட்சி கல்யாணம் - செல்லத்தம்மன் திருவிழா என மதுரையை சுற்றி வந்த ஞாபகங்கள் நெஞ்சில் ஜில்லிடுகின்றன.
திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரத்தை பூர்விகமாக கொண்டவர். மதுரையில் வளர்ந்து, பின்னர் என்னுடன் கோவை, சென்னை என்று பயணப்பட்டார்.
அப்பா இல்லாத சமயங்களில், கொஞ்சம் அழகான, அப்பா சாப்பிடும் தட்டில் சாப்பிட, எங்கள் வீட்டில் 5 பிள்ளைகளுக்குள் ஒரு காலத்தில் போட்டி இருக்கும்...ஒரே ஆண் பிள்ளையான எனக்கு மட்டும் அப்பா தட்டு கிடைக்கும். சிலிர்க்கும் அன்றைய ஞாபகங்கள் இன்றைய கப் நூடுல்ஸ் குழந்தைகளுக்கு பிடிக்குமா தெரியவில்லை.
அடுத்தது என்ன என்ற எண்ணங்கள் மனதை வருடும்போது, ஒரு முறை கோவை ஸ்ரீ லலிதாம்பிகா பீடம் முனைவர் ஜகன்னாத சுவாமி கூறிய கதைதான் நினைவுக்கு வரும்...
ஒரு ராஜா. அரண்மனை ஜோசியரை அழைத்து எதிர்காலம் குறித்து கேட்கிறார்.
முன்று தலைமுறையும் ஓஹோ-னு வாழும் ஒரு பிரச்னையும் இல்லை ராஜா என்று சொல்லி கிளம்பினார்.
ராஜாவுக்கு சந்தோசம் ...
திடீரென்று மன கவலை ...
முன்று தலைமுறைக்கு பிறகு எப்படி இருப்பார்கள் என்று ஜோசியர் சொல்லவில்லையே ...
மீண்டும் அழைத்தார். ஜோசியர் வந்தார்.
சாரி, மன்னா, 4வது தலைமுறைக்கு பிறகு உன் வாரிசுகள் கஷ்டபடுவர்கள். அதான் நான் சொல்லவில்லை. ..என்று சொல்லி கிளம்பினார்.
கவலையில் ஆழ்ந்தார் ராஜா.
3 தலைமுறைக்கு பிறகு ராஜ்யத்தில் உள்ள என் வாரிசுகள் கஷ்டப்படுவர்களா ? இந்த வாழ்க்கை எதற்கு ?
கோட்டை துறந்து, காடு புறப்பட்டார்..
வழியில் ஒரு துறவி கண்டார். அவர் முகத்தில் பசி களைப்பு. தான் எடுத்து வந்த உணவை தந்தார்.
துறவி முகத்தில் மகிழ்ச்சி.
சுவாமி, அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வீர்கள்? பழங்கள் பறித்து தருகிறேன். எடுத்து செல்கிறீர்களா- என கேட்டான் ராஜா.
துறவி சிரித்தார்...
மன்னா, எனது 'அடுத்த வேளை உணவு' குறித்து, நான் எதற்கு கவலைபடவேண்டும்?.என்னை படைத்தவன் அல்லவா அது குறித்து கவலைப்பட வேண்டும். அவன் பார்த்துக் கொள்வான்.. என்று சொல்லி நடக்க ஆரம்பித்தார்.
அடுத்த வேளை உணவு குறித்தே துறவி கவலைப் படாமல் இருக்கிறார் . நாம், ஏன் 4 வது தலைமுறை கஷ்டம் பற்றி இப்போது வருந்தி இப்போது உள்ள வாழ்க்கையையும் இழக்க வேண்டும் என்ற ஞானம் பிறந்து மகிழ்ச்சியுடன் அரண்மனை பறந்தான் அரசன்...
- அந்த துறவியின் மன நிலையில் தான் எனது அப்பாவும் எப்போதும் இருப்பார்.
வீடு, வாகனம் பற்றிய எனது கவலைகளை காணும் போதெல்லாம், மரம் வச்சவன் தண்ணீ ஊத்துவான் ...உனக்கு எல்லாம் கிடைக்கும், கவலைப்படாதே!- என்பார்.
தன்னை கவலைகள் அண்டாமல் பார்த்துக் கொள்வார். அடிக்கடி கண்ணாடியில் முகம் பார்ப்பார். பல கோணங்களில் ரசித்துகொள்வார்...
கனவு, கவலை ஏதும் இன்றி, நிகழ் கால நிமிடங்கள் ஒவ்வொன்றையும் ரசனையாய் அனுபவிப்பார்...
எப்போது நினைத்து பார்த்தாலும், அப்பாக்கள் எப்போதும் ஆச்சர்யமானவர்களே!

No comments:

Post a Comment

Comment as என்ற இடத்தில் Anonymous என்பதைத் தெரிவு செய்து கொள்ளலாம் அல்லது gmail அக்கவுண்ட் இருந்தால் google என்ற விவரத்தைத் தெரிவு செய்து கொண்டு, உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.