Friday, August 14, 2015

அம்மாவின் பட்டியல் நீள்கிறது... 




‘எனக்கொரு ஆசைடா. இனிமே எப்ப பாக்கப்போறோமோ. மெட்ரோ ரயிலை கொண்டு போய் காட்றா...’ - 75 வயது கடந்த என் அம்மாவின் நினைவூட்டல். காலையில் இருந்து மணிக்கொருதரம் வந்த டிவி நேரலைகளை பார்க்கும்போதெல்லாம், திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தார்.
‘சரி போலாம்!. திங்கட்கிழமைக்கு மேல... ‘பீக்’ அவர் இல்லாத... கூட்ட நெரிசல் இல்லாத நேரமா பாத்து நான் அழைச்சுட்டு போறேன்...’ என்று சொல்லி முடிப்பதற்குள்...
‘இன்னிக்கு போனா, ஜெயலலிதா கொடி காட்டுறதையும் பாத்திரலாம்ல...’
இதுக்கு மேல ‘பிளான்’ பண்ணினா, சரியா வராதுன்னு, ‘கிளம்புங்க’னு உடனே புறப்பட்டோம். அம்மா, மனைவி, மகள் - 3 பெண்கள் பிளஸ் நான். பள்ளிக்குச் சென்ற என் மகனுக்கு தெரியாமல் நடந்தது ‘ரகசிய பிளான்’.
‘வீட்ட பாத்துக்கங்க’ அப்பாவிடம் சொல்லிவிட்டு புறப்பட்டோம்.
வீட்டு வாசலைக் கடந்தாலே, ‘பாத்ரூம் வர்றமாதிரி இருக்கு’ என பீதி கிளப்பும் என் 85 வயது அப்பா முகத்தில் சோகம்.
‘என்ன காவல் காக்க வைத்துவிட்டு போறீங்க. நான் எப்ப ரயில பார்க்க?’
அவரை தனியாத்தான் சமாளிக்கணும் என்ற முடிவுடன், ‘அடுத்த வாரம் நீங்க’ என்று ஆறுதல் சொல்லி கிளம்பினோம்.
ஆலந்துõர் மெட்ரோவில் கரை வேட்டிகள் கூட்டம்.
‘வண்டி கட்டி’ ஊர்களை கடந்து வளர்ந்த எனது அம்மாவுக்கு மெட்ரோ நவீனங்கள் புது பரவசம். பார்வை குறைபாட்டிலும், முதுகு வலியிலும், ஒரு மணி நேரமாக மெட்ரோ ஸ்டேசனை சுற்றி பார்த்தபடி இருந்தார். ரயில் பயணத்தின்போது இருக்கையில் அமராமல், பிரமாண்டமாய் பரந்து, விரிந்து கிடந்த சென்னை மாநகரை ஜன்னலுக்கு வெளியே ரசித்தபடி வந்தார்.
வயது, ஆக, ஆக வெளி உலகை பார்க்க வேண்டும் என்ற அதீத ஆவல் அம்மாவுக்கு!
பல நேரங்களில், நமக்கு ஏற்படும் ‘வாழ்க்கை அழுத்தங்களில்’ உடன் இருப்பவர்களின் விருப்பங்கள் நமது செவிகளைக்கடந்து மனதை தொடாமலே போய்விடுகிறது.
இன்று எனது காதுகள் அடைபட்டு, மனக்கதவுகள் திறந்திருந்த வேளையில் ஒலித்த, எனது அம்மாவின் குரல் என் சோம்பல் கலைத்தது. சோகம் விரட்டியது.
அம்மாவின் சின்னச் சின்ன ஆசைகளையாவது உடனே நிறைவேற்றுவோம் என அலுவலகத்துக்கு அரை நாள் லீவு சொல்லி, அம்மா கேட்டவுடன், முதல்நாள், முதல் பயணமாக மெட்ரோவில் பயணித்தோம்.
சட்டசபை, செயின்ட் ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் மாளிகை என அம்மாவின் பட்டியல் நீள்கிறது...

No comments:

Post a Comment

Comment as என்ற இடத்தில் Anonymous என்பதைத் தெரிவு செய்து கொள்ளலாம் அல்லது gmail அக்கவுண்ட் இருந்தால் google என்ற விவரத்தைத் தெரிவு செய்து கொண்டு, உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.