Friday, August 14, 2015




இன்னமும் அலை மோதுகிறது...
கலாம் மூச்சுக்காற்று!


கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழகம் சென்றிருந்தேன். அங்கே மக்கள் ஜனாதிபதி
அப்துல் கலாம் அவர்கள் தங்கி இருந்த கெஸ்ட் ஹவுஸ் அறையை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது.
கலாம் வாழ்க்கை முறை பற்றி அவரது உதவியாளர் பாலசுப்ரமணியன் சொல்ல, சொல்ல, கலாம்
பயன்படுத்திய நாற்காலிகள், மேஜை, படுக்கை, தலையணை என எல்லாமும் என்னோடு
பேசிக் கொண்டிருந்தன.
குடியரசு தலைவர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டதும் அவருக்கு வந்த கடிதங்கள்.
மாணவர்களிடம் பாடம் எடுக்க, அவர் கைப்பட எழுதிய அறிவியல் கருத்தரங்க குறிப்புகள்.
இசையில் கரைந்து அவர் உருகி, உருகி கேட்ட இசை குறுந்தகடுகள், மியூசிக் பிளேயர்.
அவரை தேடிவந்த அன்பு பரிசுகள்.
கோவை பிஎஸ்ஜி கல்லூரி மாணவர்கள் தொடங்கி மாணவச்
செல்வங்கள் அவரை வரைந்து அனுப்பி இருந்த ஓவியங்கள். அவர் தேடித்தேடி படித்த புத்தக
பொக்கிஷங்கள். அவர் தோளில் விழுந்த சிறு சால்வையைக்கூட அவர் எங்கும் எடுத்துச் செல்லாமல்
அப்படியே விட்டு சென்றிருந்த தன்னலமற்ற தலைவனின் பண்பு விழிகளை நனைத்தது.
அங்கு வந்திருந்த ஒரு வார இதழ் போட்டோகிராபர், கலாம் உதவியாளரிடம், ‘பாலு சார்’ (தனது
உதவியாளரை இப்படித்தான் அழைப்பார் கலாம்), அந்த கட்டில் அருகில் நின்று தலையணையை
தொடுங்கள்’ என்றார்.
‘சாரி சார். கலாம் சார் பயன்படுத்திய பொருட்கள் எதையும் நாங்கள் தொடமாட்டோம். அது
அவருக்கு நாங்கள் செய்யும் மரியாதை’ என்று பதைபதைப்புடன் அவர் மறுத்தார்.
நிஜம்தான். அவர் தொட்டு புழங்கிய பொருட்களில் இன்னமும் அவர் விரல் ரேகைகள் ஓடுகின்றன.
அவர் வசித்த அறைகளில் இன்னமும் அவரின் மூச்சுக்காற்று அலை மோதுவது போன்ற உணர்வு...
கலாம் வசித்த அறைகளில் நாம் இருந்த அந்த நிமிடங்கள், அவர் நம்மோடு துறுதுறுவென
பயணிப்பது போலவும், பேசிக்கொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Comment as என்ற இடத்தில் Anonymous என்பதைத் தெரிவு செய்து கொள்ளலாம் அல்லது gmail அக்கவுண்ட் இருந்தால் google என்ற விவரத்தைத் தெரிவு செய்து கொண்டு, உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.