Monday, June 18, 2012

அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியம்!

‘நம்ம லலிதாம்பிகை அம்மன் கோவில்ல 100 சிட்டுக்குருவிகள் இருக்குங்க. அதிகாலை பொழுதுகளில் அவை செய்யும் ‘கீச்சுக்குரல் சங்கீதம்’ கேட்டால் வாழ்நாள் துயரமெல்லாம் பறந்தே போய்விடும். ஆனா, அதை எங்களோடு சேர்ந்து அனுபவிக்கத்தான் யாராவது வேண்டும். வாங்க... வாங்க...’
 - கோவையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அனுவாவி மலையடி வாரத்தில் அமைந்துள்ள  லலிதாம்பிகை கோயில் ஸ்தாபகர் ஸ்ரீ ஜெகநாத சுவாமி அனுப்பிய மெயில் இது. தொலைந்து வரும் சிட்டுக்குருவி இனங்கள் குறித்து வாரமலரில் வந்த செய்திக்கு அவர் தந்த பதில். அதை படித்ததும் பரவசம்.
ஆட்டோக்களில் அடைபட்டு பயணிக்கும் நகர குழந்தைகளைவிட, வயல் வரப்புகளை கடந்து செல்லும் கிராமத்து செல்லங்கள் தன்னம்பிக்கையுடன், தைரியமாக வளர்கின்றன. திரும்பிய திசையெல்லாம் பரந்து விரிந்து கிடக்கும் இயற்கைதான் அவர்களுக்கு தெம்பு தருகிறது போலும்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை கான்கிரீட் கட்டடங்களும், சாலைகளில் ‘தலைதெறிக்க ஓடும்’ வாகனங்களையும் பார்த்து அலுத்துப்போனது சென்னை வாழ்க்கை. 
‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா?. அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியம்’ எனப் பாடி பரவசமடைந்த பாரதிமீது பொறாமைதான் வருகிறது.
பறவைகள், நதி, வானம், மரங்கள், மலர்கள் என எதை பார்த்தாலும் பாரதியின் மனசுக்குள் மத்தாப்புதான். பாரதி அளவுக்கு பரவசம் எட்டாவிட்டாலும், சென்னை போன்ற நகர வாழ்க்கையில்  சின்னச்சின்ன சந்தோஷங்கள் மனசுக்குள் எட்டிப்பார்த்து அவ்வப்போது பரவசப்படுத்துவதுண்டு.
அக்னி நட்சத்திர காலத்தில் வழியில் துளியும் நிழல் இல்லாமல், அனல் காற்று முகத்தில் அடிக்க பயணம் செய்யும் போது சாலைகளில் நடுநடுவே எங்காவது தட்டுப்படும் மரநிழல் மனசுக்குள் ‘ஜில்’லடிக்கும்... 

அலுவலகத்துக்கு அவசரமாய் கிளம்பிச் செல்லும்போது, வழியெங்கும் ‘பச்சை சிக்னல்’ ஒளிர்ந்து இடையில் நிற்காமல் வாகனத்தில் பறப்பதில் சின்ன சந்தோஷம்... 

நெற்றி சுருங்க, தலை கனக்க சோர்வான மாலை பொழுதுகளில் ஒரு கப் காபி சாப்பிட்டு மனசை மலரச் செய்யலாம் என ஓட்டலில் காபி ஆர்டர் செய்வோம். சரியான சூடு, நாசி துளைக்கும் நறுமணம், நாக்கின் சுவை அரும்புகள் வழியே மூளைக்குள் மின்சார பாய்ச்சலாய் செல்லும் அசத்தல் சுவையில் காபி கிடைத்தால் அது வரம். அன்று நாள் முழுதும் அதே ஞாபகம்...

அரசு பஸ்சிலோ, மின்சார ரயிலிலோ பக்கத்து இருக்கையில் ‘குண்டு’ ஆசாமி அமராமல் இருந்தால் எட்டிப்பார்க்கும் துளி சந்தோஷம்... 

அரைத்து எடுத்த பருப்பு, மிளகாய் கலவை. இடையிடையே தேங்காய் பல் எட்டிப்பார்க்க, சுற்றிலும் எண்ணை பட, இளம் சூட்டில் வேகவைத்து, பொன்னிறத்தில் ஆவி பறக்க அம்மா வார்த்து கொடுக்கும் அடையை செல்போன், டிவி ‘ஆப்’ செய்து விட்டு, நாவில் சூடுபட சாப்பிடுவதில் அலாதி ஆனந்தம்...

வீட்டு பால்கனியில் எப்போதாவது வந்து அமர்ந்து தலை சாய்த்து ‘கரையும்’ காகம்... 

எச்சில் தொட்டு கிழித்து கொடுக்கும் பஸ் டிக்கட்டுக்குப்பின்னர் சரியான சில்லறை திருப்பித்தரும் கண்டக்டர்...
காபி பொடி கடையிலேயோ, ரேஷனிலோ நாம் பார்க்கிறோமா என நொடியில் கவனித்ததும் சரியான அளவில் எடை கட்டும் சிப்பந்திகள்... 

பான்பராக் கறை படியாத அபார்ட்மென்ட் மாடிப்படிகள்... 

மொட்டை மாடியில் காகம், அணில்களுக்கு உணவு படைப்பவர்கள், பறவைகளுக்குத் தண்ணீர் குவளை வைப்பவர்கள்... என சின்னசின்ன சந்தோஷங்கள் மனதை நிறைத்து வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்துகிறது. 

நினைவுகளை அசைபோட்டு நீங்களும் பட்டியல் போட்டு பாருங்களேன்.
அன்புடன் சேது  

No comments:

Post a Comment

Comment as என்ற இடத்தில் Anonymous என்பதைத் தெரிவு செய்து கொள்ளலாம் அல்லது gmail அக்கவுண்ட் இருந்தால் google என்ற விவரத்தைத் தெரிவு செய்து கொண்டு, உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.