Wednesday, April 25, 2012

உத்தரவு கேட்கிறாங்க

கேள்விகளும் ஆச்சர்யங்களும்

பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட மருதமலை சுப்பிரமணிய சுவாமி வீற்றிருக்கும் சன்னிதி. மூலவர் முன் விழிகளில் நீர் திரள, மனதில் ஏதோ கோரிக்கையுடன் நிற்கிறார் அந்த பக்தர். ‘த்ரி ஸ்டார்’ ஓட்டல் கட்ட தீர்மானித்திருக்கும் கோடீஸ்வரர் அவர்.

அந்த பக்தர் கொடுத்த உதிரி செவ்வரளி பூக்களை தட்டில் வாங்கிக் கொண்டு மூலவரிடம் செல்கிறார் அர்ச்சகர். மூலவரின் இரண்டு தோள்களிலும் ஒவ்வொன்றாக பூக்களை வைக்கிறார். தட்டில் தீபம் ஏற்றிக் கொள்கிறார். 

‘ம்... இறைவன் முன்னால,  உங்க மனசில இருக்கிறத வேண்டிக்கங்க..’ - அர்ச்சகர் குரல் அதிர்கிறது. காதில் நுழைந்த மணியோசை, மூளை நரம்பெல்லாம் பரவி ஒரு மின்சார அதிர்வை உண்டாக்க, இரு கைகள் கூப்பி கண்கள் மூடி அந்த பக்தரின் உதடுகள் முணுமுணுக்கிறது.

மணியோசை அடங்கி சன்னதி அமைதியானது. அதுவரை கண்கள் மூடி நின்றிருந்த பக்தர் விழித்துக் கொள்கிறார். சிரித்த முகத்துடன் காட்சி தரும் மூலவரை விழி இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். தீபம் சுடர்விட, ஆரத்தி தட்டை சுற்றி மூலவருக்கு தீபாராதனை காட்டுகிறார் அர்ச்சகர். சில விநாடிகள் நிசப்தம்.

தீபம் காட்டிய அர்ச்சகர், வேண்டி நின்ற பக்தர், அவர் உடன் வந்தவர்கள் என எல்லாரும் முருகப்பெருமானையே பார்த்துக் கொண்டிருக்க, திடீரென மருதமலை ஆண்டவரின் வலது தோளில் வைக்கப்பட்டிருந்த செவ்வரளிப் பூ நழுவி கீழே விழுந்து முருகன் பாதத்தில் சரணடைகிறது.
‘வலது பூ விழுந்துருச்சு. நீங்க முடிவு எடுத்துரலாம். சுவாமி உத்தரவு கொடுத்துட்டார்’ என்றபடி அர்ச்சகர் பிரசாதம் கொடுக்க, பக்தர் முகத்தில் ஆயிரம் வாட் பிரகாசம்.

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டாண்டு காலமாக இந்த ‘உத்தரவு கேட்கும்’ சம்பிரதாயம் இருந்து வருகிறது. இதற்காக கோயிலில் 10 ரூபாய்க்கு சீட்டு வைத்திருக்கிறார்கள். காலை 8 மணிக்கு முன்னர் சென்றுவிட வேண்டும். உதிரி அரளிப்பூ வாங்கிச் செல்ல வேண்டும். கிருத்திகை, அஷ்டமி, நவமி நாட்களில் ‘உத்தரவு கேட்க’ அனுமதிக்க மாட்டார்கள்.

 ‘உத்தரவு கேட்டு’ வருபவர்களை மூலவர் முன் அமர வைப்பார்கள்.
சுவாமியின் வலது, இடது தோள்களில் அரளிப்பூ வைக்கிறார்கள். அதன்பின் கோரிக்கையை மனதில் நினைத்துக் கொள்ள சொல்கிறார்கள். அர்ச்சகர் ஆரத்தி காட்டி முடித்ததும் ஆண்டவன் தோளில் இருந்து பூ விழும்.  வலது பூ விழுந்தால் மனதில் நினைத்த காரியம் நடக்கும்.  இடது பூ விழுந்தால் காரியம் கைகூடாது. இரண்டும் விழாமல் இருந்தால் ‘நிறைஞ்சு இருக்கிறது’னு அர்த்தம். காரியத்தை ஒத்தி போடணும்.

‘கடந்த 18 வருஷமா மருதமலை வந்து உத்தரவு கேட்கிறேன். என்ன பொறுத்தவரை முருகன் கொடுக்கிற உத்தரவு நூறு சதவீதம் சரியா நடந்திருக்கு’ என சிலாகித்து சொல்கிறார் தொழிலதிபர் கோவை ரமேஷ்.

‘சின்ன விஷயத்தைக்கூட ‘உத்தரவு’ கேட்டு செய்ற பக்தர்கள் நிறைய பேரை  பார்க்கிறோம்’ என்கிறார் கோயில் குருக்கள் சோமு.

வரன் முடிவு செய்வது, வியாபாரம் தொடங்குவது, தொழில் அக்ரிமென்ட், இடம் வாங்குவது, புதிய வேலைக்கு போவது என மனதில் கேள்விகளோடு முருகன் உத்தரவு வேண்டி சன்னிதியில் நிற்பவர்கள் ஏராளம்.

3 comments:

  1. உத்தரவு கேட்கிறாங்க - உண்மையின் பறைசாற்றல். பெரும்பாலும் நம்பிக்கையில் தான் வாழ்க்கை நகர்கிறது. முன்பெல்லாம் வீடுகளில் பெரியோர்கள் இருப்பார்கள். அவர்களையே தெய்வமாகக் கருதி அவர்களிடம் ஆசி பெற்று முயற்சிகளை எடுப்பது வழக்கமாக இருந்தது. கூட்டுக் குடும்பங்கள் குறை ந்து வருகின்ற இந்நாளில் இறைவனை மட்டும் தான் நம்பியிருக்க வேண்யிருக்கிறது. இன்றைக்கு கோயில்கள் நிரம்பி வழிய இதுவும் ஒரு காரணம்.

    ReplyDelete
  2. Hi,
    Your writings shows your spiritual interest. Expect your article in different subject.
    Best of Luck.

    ReplyDelete
  3. Your writings are free flowing and smooth.keep it up.Lakshmi Narasimhan

    ReplyDelete

Comment as என்ற இடத்தில் Anonymous என்பதைத் தெரிவு செய்து கொள்ளலாம் அல்லது gmail அக்கவுண்ட் இருந்தால் google என்ற விவரத்தைத் தெரிவு செய்து கொண்டு, உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.